குறுகிய காலத்தில் அதிக இலாபம் சம்பாதித்த வியாபாரி

வௌ்ளைப்பூண்டு மோசடி: குறுகிய காலத்தில் அதிக இலாபம் சம்பாதித்த வியாபாரி

by Staff Writer 15-09-2021 | 7:36 PM
Colombo (News 1st) பொதுமக்களுக்கு நிவாரண விலையில் உணவுப்பொருட்களை விநியோகிப்பதற்கான அமைச்சரவை பத்திரம் என்ற போர்வையில், துறைமுகத்திலிருந்து 56,000 கிலோகிராம் வௌ்ளைப்பூண்டுகளை கைமாற்றம் செய்த வியாபாரி, குறுகிய காலத்திற்குள் ஒரு கோடி ரூபாவை விட அதிக இலாபம் சம்பாதித்துள்ளமை தெரியவந்துள்ளது. சந்தையில் தற்போது ஒரு கிலோகிராம் வௌ்ளைப்பூண்டின் விலை 320 ரூபாவாக உள்ளது. சதொச ஊடாக மக்களுக்கு நிவாரண விலையில் விநியோகிப்பதாக தெரிவித்து கடந்த செப்டம்பர் 09 ஆம் திகதி 56,000 கிலோ வௌ்ளைப்பூண்டு துறைமுகத்திலிருந்து கொண்டுவரப்பட்டது. இந்த வௌ்ளைப்பூண்டு ஒரு கிலோகிராம் 135 ரூபா வீதம் வௌி வியாபாரிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. 135 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் வௌ்ளைப்பூண்டு 320 ரூபாவுக்கு மொத்த சந்தையில் விற்கப்படுமாயின், மிக இலகுவாக இடைத்தரகர்கள் 1,03,60,000 ரூபாவை சம்பாதித்துள்ளனர். வௌ்ளைப்பூண்டு விடயத்தில் வியாபாரிகளுக்கு அதிர்ஷ்டம் என்றாலும் நுகர்வோரின் நிலைமை அவ்வாறல்ல. வெறுமனே CR புத்தகத்தில் பதிவொன்றை இட்டே, துறைமுகத்திலிருந்து 56,000 கிலோகிராம் வௌ்ளைப்பூண்டு விடுவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையால் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது. வௌ்ளைப்பூண்டு மோசடி தெரியவந்தவுடன், இந்த மோசடிக்கும் சதொசவிலுள்ள உயர் அதிகாரிகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என வர்த்தக அமைச்சு அறிக்கையொன்றை வௌியிட்டது. இதனிடையே, இந்த விடயம் தொடர்பில் லங்கா சதொசவின் தலைவர், ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸிடம் நேற்று (14) வினவியபோது, நான்கு அதிகாரிகள் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். வழமையாக, கட்டாய விடுமுறை வழங்கப்படுவது கீழ் மட்டத்திலுள்ளவர்களுக்கு அல்ல. மேல் மட்டத்தில் உள்ளவர்களுக்கே! இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அதன் அடுத்தகட்ட நகர்வின் மூலம் இந்த வௌ்ளைப்பூண்டு மோசடியின் பிரதான சூத்திரதாரியை வௌிக்கொண்டுவர வேண்டியுள்ளது. நோய்த்தொற்று காரணமாக முழு நாடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இந்த காலப்பகுதியில், இவ்வாறாக வௌ்ளைப்பூண்டிலும் கொள்ளையடிப்பதாலேயே இதனோடு தொடர்புடையவர்களை வௌிப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.