by Bella Dalima 14-09-2021 | 9:15 PM
Colombo (News 1st) துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட 2 வெள்ளைப்பூண்டு கொள்கலன்களை லங்கா சதொசவிற்கு வழங்கும் போர்வையில் வேறு ஒரு வர்த்தகருக்கு வழங்கப்பட்டமை தொடர்பில் அந்த கொள்கலன்களை இறக்குமதி செய்த நிறுவனம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு செய்தது.
Enrichers Investment நிறுவனமே இந்த வௌ்ளைப்பூண்டை நாட்டிற்கு இறக்குமதி செய்திருந்தது.
தாம் இறக்குமதி செய்த 18 கொள்கலன்களில் இரண்டு கொள்கலன்கள் திருட்டுத்தனமாக துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்த தனியார் நிறுவனம் குற்றம் சுமத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் பிரதிநிதிகள் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்தனர்.
அத்தியாவசிய உணவுப்பொருட்களை சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்வதற்கு அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானமும் வௌ்ளைப்பூண்டு கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமைக்கு காரணமாக அமைந்துள்ளது.
துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு கொள்கலன்களிலும் இருந்த 56 கிலோகிராம் வௌ்ளைப்பூண்டு திருட்டுத்தனமாக வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை நுகர்வோர் விவகார அதிகார சபை மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கும் குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்றும் சுற்றிவளைப்பை மேற்கொண்டது.
சீதூவையில் இன்று முனெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒரு பகுதி வௌ்ளைப்பூண்டு அங்கிருந்ததாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் துஷான் குணவர்தன தெரிவித்தார்.
கொள்கலன் திறக்கப்பட்டு, அதிலிருந்த வௌ்ளைப்பூண்டின் ஒரு பகுதி விற்பனை செய்யப்பட்டிருந்ததாக அவர் கூறினார்.
துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட வௌ்ளைப்பூண்டு கொள்கலன்கள் தற்போது எங்கேயுள்ளன?
இது தொடர்பில் பல தகவல்களை கண்டறிந்த நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகளும் நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் இன்று கெரவலப்பிட்டியவில் உள்ள களஞ்சியசாலை தொகுதியொன்றை சோதனைக்கு உட்படுத்தினர்.
அங்கு சீல் வைக்கப்பட்ட இரண்டு கொள்கலன்கள் இருக்கின்றமை தெரியவந்தது.
இது தொடர்பாக லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸிடம் வினவிய போது, இந்த மோசடி தொடர்பில் நான்கு அதிகாரிகள் நேற்று முதல் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நிறுவன மட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணை தொடர்பிலான அறிக்கை நாளை (15) கிடைக்கவுள்ளதாகவும் லங்கா சதொச நிறுவன தலைவர் கூறினார்.
அந்த அறிக்கை கிடைத்தவுடன் அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.