வட மாகாண தீவுகளில் சீன மின்சக்தி திட்டம்; இந்தியாவிற்கு எச்சரிக்கை மணியா?

by Bella Dalima 14-09-2021 | 7:06 PM
Colombo (News 1st) வட மாகாணத்தின் மூன்று தீவுகளில் ஹைப்ரிட் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டத்தை சீன நிறுவனங்கள் முன்னெடுக்கும் திட்டங்களை தொடர்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. நயினாதீவு, நெடுந்தீவு மற்றும் அனலைதீவில் சீன நிறுவனங்களின் ஹைப்ரிட் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டத்திற்கே அனுமதி கிடைத்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீன இருப்பு, இந்தியாவிற்கு மாத்திரமன்றி அமெரிக்கா மற்றும் பிற சர்வதேச தரப்புகளுக்கும் கவலையளிக்கும் விடயம் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் உட்கட்டமைப்பு திட்டங்களில் சீனாவின் ஈடுபாடு குறித்து இந்தியா அடிக்கடி கவலை தெரிவித்த போதிலும், அச்சுறுத்தல் ஒருபோதும் நெருக்கமாக இருந்ததில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பின்புலத்திலேயே சீனாவின் Sinosoar-Etechwin Joint Venture நிறுவனம் ஹைப்ரிட் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டத்தை மூன்று தீவுகளில் முன்னெடுப்பதற்கு அமைச்சரவை இணங்கியுள்ளதாகவும் இது இந்தியாவின் இராஜதந்திர கட்டமைப்பிற்கு எச்சரிக்கை மணி அடிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சீன திட்டத்திற்கு வழங்கப்படக்கூடும் என்ற தௌிவின்றி, தமிழ் மக்களுக்கு சொந்தமான காணி, இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகம் வௌியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது. சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நடப்பவற்றில் தலையிட ஒரு கட்டத்திற்கு மேல் உரிமை இல்லை என்ற போதிலும், மத்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கக்கூடிய விடயங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.