மீள் பிறப்பாக்க எரிசக்தி திட்டத்திற்கு அங்கீகாரம்

மீள் பிறப்பாக்க எரிசக்தி திட்டம் தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

by Bella Dalima 14-09-2021 | 6:44 PM
Colombo (News 1st) மீள் பிறப்பாக்க எரிசக்தி திட்டத்தை நோக்காகக் கொண்டு, மின்சக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கமைய, 2030 ஆம் ஆண்டளவில் நாட்டின் மின்சக்தி தேவையில் மீள்பிறப்பாக்க மூலங்களிலிருந்து அதிகளவு மின்சாரத்தை பெற இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டின் மின் தேவையின் 70 வீதத்தை 2030 ஆம் ஆண்டளவில் மீள் பிறப்பாக்க எரிசக்தி மூலங்கள் மூலம் பெற எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அத்துடன், 2050 ஆம் ஆண்டாகும் போது நாட்டின் மின்னுற்பத்தியில் முழுமையாக கார்பன் நீக்கப்பட்ட நிலையை உருவாக்குவதற்கு நடவடிக்கையை எடுப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, 2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க மின்சக்தி சட்டம் மற்றும் குறித்த சட்டத்தின் திருத்தங்களுக்கு அமைய, இலங்கை மின்சார சபையினால் ''குறைந்த செலவில் நீண்டகால மின்னுற்பத்தி திட்டம்'' தயாரிக்கப்பட வேண்டும். இதனை தயாரிப்பதற்காக, மின்சக்தி அமைச்சரால் பொது கொள்கை வழிகாட்டியொன்று மின்சார சபைக்கு வழங்கப்பட வேண்டும் என அமைச்சரவை தீர்மானங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டியை வௌியிடுவதற்காக மின்சக்தி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.