மத்திய வங்கி அரசியல் தலையீடுகளின்றி இயங்க வேண்டும்: சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

மத்திய வங்கி அரசியல் தலையீடுகளின்றி இயங்க வேண்டும்: சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

மத்திய வங்கி அரசியல் தலையீடுகளின்றி இயங்க வேண்டும்: சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

எழுத்தாளர் Bella Dalima

14 Sep, 2021 | 2:00 pm

Colombo (News 1st) அரச நிதி தொடர்பில் கொள்கை ரீதியிலான தீர்மானங்களை எடுக்க வேண்டிய மத்திய வங்கி, அரசியல் தலையீடுகளின்றி இயங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளார்

நாடு கடனை திருப்பிச் செலுத்தும் போராட்டத்தில் சிக்கிக்கொண்டுள்ள நிலையில், பொருளாதார நெருக்கடி மற்றும் பாரிய அந்நிய செலாவணி தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினராகவும் நிதி இராஜாங்க அமைச்சராகவும் செயற்பட்ட அஜித் நிவாட் கப்ராலை, மத்திய வங்கியின் ஆளுநராக பிரேரித்து நியமிக்கின்ற போது, சர்வதேச சமூகத்திற்கு நாடு குறித்தும், நாட்டின் பொருளாதாரம் குறித்தும் குழப்பம் ஏற்படுவதோடு, நம்பிக்கையின்மை வலுப்படும் என சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கி தொடர்பில் தவறான தீர்மானங்களை எடுத்த அர்ஜென்டீனா, ஹங்கேரி, சிம்பாப்வே போன்ற நாடுகளுக்கு ஏற்பட்ட நிலைமை இலங்கைக்கும் ஏற்படக்கூடாது என அவர் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக செயற்பட்ட காலத்தில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு பல மில்லியன் அமெரிக்க டொலர்களை இழக்கச் செய்த ஹெஜின் உடன்படிக்கை மற்றும் நாட்டிற்கு பல மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பினை ஏற்படுத்திய முறிகள் விநியோகம் மற்றும் 2019 ஆம் ஆண்டு முறிகள் தொடர்பிலான தடயவியல் அறிக்கையில் அஜித் நிவாட் கப்ராலின் செயற்பாடுகள் குறித்து குளறுபடிகள் காணப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீட்சி பெற வேண்டுமாயின், சர்வதேசத்தின் நன்மதிப்பை பெற்று, சர்வதேசம் நம்பிக்கை கொள்கின்ற, கறையற்ற ஒருவர் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்