by Staff Writer 13-09-2021 | 3:26 PM
Colombo (News 1st) ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் (NMRA) தரவுகள் அழிக்கப்பட்டமையானது நாட்டிற்கு ஔடதங்கள், மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்ததன் மூலம் சட்டவிரோதமாக பணம் ஈட்டிய மருத்துவ மாஃபியாவின் சூழ்ச்சி என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப்ப பீரிஸ் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.
நாட்டிற்கு ஔடதங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களின் பெயர் மற்றும் அந்நிறுவனங்களினால் இறக்குமதி செய்யப்பட்ட ஔடதங்கள், உபகரணங்களின் பெயர்களே அழிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தரவுகள் அழிக்கப்பட்டதால் ஔடதங்களை வெவ்வேறு வர்த்தக நாமங்களில் இறக்குமதி செய்யும் ஒளடத நிறுவனங்கள் தாம் விரும்பிய விலைகளில் அவற்றை விற்பனை செய்யும் அபாயம் காணப்படுவதாக கொழும்பு பிரதம நீதவான் புத்திக ஶ்ரீராகலவிற்கு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப்ப பீரிஸ் அறிவித்துள்ளார்.
குறித்த தரவுக்கட்டமைப்பை பாதுகாக்கும் முழு பொறுப்பும் Epic Lanka Technologies நிறுவனத்துக்கே உள்ளதெனவும் அந்த பொறுப்பை குறித்த நிறுவனம் முறையாக நிறைவேற்றவில்லை என்பதும் புலப்படுவதாக மன்றில் குறிப்பிட்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல், அது தொடர்பில் விரிவான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுக்கட்டமைப்பை புதுப்பிப்பதிலுள்ள சிக்கலை இரு தரப்புமே சீர்செய்ய வேண்டும் எனவும், அதில் நீதிமன்றம் தலையிடும் அவசியமில்லையெனவும் இதன்போது தெரிவித்த கொழும்பு பிரதம நீதவான் புத்திக்க ஶ்ரீராகல, குறித்த தரவுக்கட்டமைப்பை புதுப்பிக்க கடந்த 9 ஆம் திகதி நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடையுத்தரவை நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
வழக்கின் பிரதிவாதியான தரீந்திர கல்பகே இன்று மன்றில் ஆஜராகாததால், வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.