2 ஆவது T20: 9 விக்கெட்களால் தென்னாபிரிக்கா வெற்றி

இலங்கைக்கு எதிரான இரண்டாவது T20: 9 விக்கெட்களால் தென்னாபிரிக்கா வெற்றி

by Staff Writer 13-09-2021 | 11:33 AM
Colombo (News 1st) இலங்கைக்கு எதிரான இரண்டாவது சர்வதேச T20 போட்டியில் 9 விக்கெட்களால் தென்னாபிரிக்கா வெற்றி பெற்றது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, தென்னாபிரிக்க வீரர்களின் துல்லியமான பந்துவீச்சில் விக்கெட்களை விரைவாக பறிகொடுத்தது. இலங்கை அணிக்கு குசல் ஜனித் பெரேரா மற்றும் தினேஷ் சந்திமால் ஜோடி ஆரம்பத்தை வழங்கியதுடன், முதல் விக்கெட் 10 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது. கடந்த போட்டியில் அரைச்சதம் கடந்து நம்பிக்கை கொடுத்த தினேஷ் சந்திமால் 5 ஓட்டங்களுடன் வெளியேறினார். குசல் ஜனித் பெரேரா அதிகபட்சமாக 30 ஓட்டங்களை பெற்றார். பானுக்க ராஜபக்ஸ 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். தலைவர் மற்றும் உப தலைவர் பொறுப்புகளை வகிக்கும் தசுன் சானக்க , தனஞ்சய டி சில்வா ஆகியோர் 11-க்கும் குறைவான ஓட்டங்களுடன் வெளியேறினர். இலங்கை அணி 18.1 ஓவர்கள் நிறைவில் 103 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. Tabraiz Shamsi, Aiden Markram ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். 104 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலளித்தாடிய தென்னாபிரிக்காவிற்கு சிறப்பான ஆரம்பம் கிடைத்தது. 62 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், முதலாவது விக்கெட்டாக Reeza Hendricks 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். Quinton de Kock சிறப்பாக துடுப்பெடுத்தாடி ஆட்டமிழக்காமல் 58 ஓட்டங்களைப் பெற்று அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். Aiden Markram 21 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார். தென்னாபிரிக்கா 14.1 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 105 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது. போட்டியின் சிறப்பாட்டக்காரராக Tabraiz Shamsi தெரிவானார். இந்த வெற்றியுடன் இலங்கை அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச T20 தொடரை, ஒரு போட்டி எஞ்சிய நிலையில் தென்னாபிரிக்கா கைப்பற்றியுள்ளது. தொடரின் இறுதிப் போட்டி நாளை (14) நடைபெறவுள்ளது.