இலங்கை பெண்ணை அரிச்சல்முனையில் இறக்கி விட்ட படகு கைப்பற்றல்

by Bella Dalima 12-09-2021 | 7:16 PM
Colombo (News 1st) இலங்கை பெண்ணை அரிச்சல்முனையிலுள்ள மணல் திட்டில் இறக்கிவிட பயன்படுத்தப்பட்ட படகை தமிழக கரையோர பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அரிச்சல்முனை மணல் திட்டில் நிர்க்கதியாகியிருந்த போது குறித்த பெண் கடந்த 5 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் நாடு திரும்ப முயற்சித்த முல்லைத்தீவை சேர்ந்த பெண் ஒருவரை தமிழக பொலிஸார் கடந்த 5 ஆம் திகதி அரிச்சல்முனை மணல் திட்டில் வைத்து கைது செய்தனர். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விமானம் மூலமாக சென்னையிலுள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில், சட்டவிரோதமாக படகு மூலம் நாடு திரும்பும் நோக்கில் தரகர் ஒருவரின் உதவியை நாடியிருந்தார். இதற்கமைய, இராமேஸ்வரத்தில் இருந்து படகு மூலம் அரிச்சல்முனை பகுதிக்கு அழைத்துச்செல்லப்பட்ட அவர் அங்குள்ள மணல் திட்டில் இறக்கிவிடப்பட்டிருந்தார். இலங்கை படகிற்காக சுமார் 8 மணி நேரம் காத்திருந்த போதும் படகு வராத நிலையில், நிர்க்கதியாகியிருந்த பெண்ணை தமிழக கரையோர பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். அவரது வாக்குமூலத்திற்கு அமைய, விசாரணைகளை முன்னெடுத்த தமிழக பொலிஸார் அரிச்சல்முனைக்கு படகை செலுத்திய சந்தேகத்தின் பேரில் நான்கு பேரை கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர். சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து, தனுஷ்கோடி பாலம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகை தமிழக கரையோர பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் தமிழக பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.