குடியுரிமைக் கல்வி பாடத்திட்டத்தில் சட்டக் கல்வி

குடியுரிமைக் கல்வி பாடத்திட்டத்தில் சட்டக் கல்வி: அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது

by Bella Dalima 12-09-2021 | 3:04 PM
Colombo (News 1st) சட்டக் கல்வியை பாடசாலை பாடத்திட்டத்தில் உள்வாங்குவதற்கு பரிந்துரைப்பற்கான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. அடுத்த இரண்டு வாரங்களில் அது தொடர்பிலான உபகுழுவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. குடியுரிமைக் கல்வி பாடத்திட்டத்தின் ஒரு பாகமாக இதனை உள்ளடக்குவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. சிறுவர் உரிமைகள் தொடர்பிலும் இதில் உள்ளடக்கப்பட வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் ஆலோசனை தெரிவுக்குழுவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 6 மாதங்களுக்கு பின்னர் கல்வி அமைச்சின் ஆலோசனைக்கான தெரிவுக்குழு, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் நேற்று (11) கூடியது. நாட்டிற்கு தேவையான கல்விக் கொள்கையொன்றை உருவாக்கி வருவதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார். இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்த இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு மிக முக்கிய பிரச்சினையாகவுள்ளதாகவும் குறிப்பிட்டார். பட்டதாரி பயிற்சியாளர்கள் 18,000 பேர் பாடசாலைகளில் பணிக்கமர்த்தப்பட்டுள்ளதாகவும், அவர்களை நிரந்தரமாக்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள முறைமை பிரச்சினைக்குரியது எனவும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் குறிப்பிட்டார். எனினும், குறித்த பட்டதாரி ஆசிரியர்கள் அதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லையென இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர சுட்டிக்காட்டினார். இதற்கு மேலதிகமாக, ஆயிரம் தேசிய பாடசாலைகளில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் பாடசாலைகளை தெரிவு செய்வது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.