by Bella Dalima 12-09-2021 | 1:59 PM
Colombo (News 1st) கொத்மலை பொலிஸ் நிலையத்தில் சார்ஜன்டாக (Sergeant) கடமையாற்றிய ஒருவர் காணாமற்போயுள்ளார்.
கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 08 ஆம் திகதி இவர் காணாமற்போனதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
பூண்டுலோயா நகரத்தை வசிப்பிடமாகக் கொண்ட, 56 வயதான சுப்பையா இளங்கோவன் என்ற பொலிஸ் சார்ஜன்டே காணாமற்போயுள்ளார்.
நெஞ்சுவலி ஏற்பட்டதால் சுவசெறிய அம்பியுலன்ஸ் ஊடாக கடந்த 08 ஆம் திகதி காலை கம்பளை வைத்தியசாலையில் இவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், உறவினர்கள் வீடு திரும்பிய நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சார்ஜன்ட் காணாமற்போயுள்ளதாக பொலிஸார் கூறினர்.
கம்பளை வைத்தியசாலை வளாகத்தை அண்மித்த பகுதிகளிலுள்ள CCTV காணொளிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பளை பொலிஸின் விசேட விசாரணைக்குழு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.