அமெரிக்க ஓப்பன் டென்னிஸில் சாதனை படைத்த 18 வயது எம்மா ராடுகானு

அமெரிக்க ஓப்பன் டென்னிஸில் சாதனை படைத்த 18 வயது எம்மா ராடுகானு

அமெரிக்க ஓப்பன் டென்னிஸில் சாதனை படைத்த 18 வயது எம்மா ராடுகானு

எழுத்தாளர் Bella Dalima

12 Sep, 2021 | 4:14 pm

Colombo (News 1st) அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் தொடருக்கு முன் உலக தர வரிசையில் 150 ஆவது இடம் பிடித்திருந்த 18 வயது எம்மா ராடுகானு (Emma Raducanu) தான் இன்று 2021 ஆம் ஆண்டுக்கான மகளிர் அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் சாம்பியன்.

தன்னை எதிர்த்து விளையாடிய லேலா ஃபெர்னாண்டஸை 6-4, 6-3 என நேர் செட்களில் வீழ்த்தி, தொடரை தனதாக்கிக் கொண்டார் எம்மா.

கடந்த 44 ஆண்டுகளாக மகளிர் பிரிவில் பிரிட்டனை சேர்ந்த ஒருவர் கிராண்ட்ஸ்லாம் வெல்வார் என்கிற காத்திருப்பிற்கு அமெரிக்க கிராண்ட்ஸ்லாம் வென்று முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் எம்மா ரடுகானு.

1977 ஆம் ஆண்டு வெர்ஜினியா வேட் என்பவர் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடரை வென்றது தான் பிரிட்டனின் கடைசி கிராண்ட் ஸ்லாம் வெற்றி. அதன் பிறகு 44 ஆண்டுகளுக்கு பிரிட்டனால் ஒரு கிராண்ட்ஸ்லாம் வெற்றியைக் கூட காண முடியவில்லை.

எம்மா ரடுகானுவுக்கு முன், வெர்ஜினியா வேட் தான் 1968 ஆம் ஆண்டு அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் தொடரை வென்றிருந்தார்.

சீன தாய்க்கும் ரோமேனிய தந்தைக்கு கனடாவில் பிறந்த எம்மா ரடுகானு, தன் பெற்றோருடன் தனது இரண்டாவது வயதில் பிரிட்டனுக்கு சென்றார். லண்டனில் வளர்ந்த எம்மா ரடுகானு, பாலே, குதிரையேற்றம், நீச்சல், கூடைப்பந்து, கோகார்ட்டிங் போன்ற எல்லாவற்றையும் முயற்சி செய்துவிட்டு, தென்கிழக்கு லண்டனில் ப்ரோம்லி டென்னிஸ் அகாடமியில் சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 5.

அவர் தற்போது பல சாதனைகளை படைத்துள்ளார்.

1. வெர்ஜினியா வேடுக்குப் பிறகு அமெரிக்க ஓப்பன் தொடரை வென்ற பிரிட்டிஷ் பெண்மணி

2. உலகிலேயே மிக இளம் வயதில் கிராண்ட்ஸ்லாம் வென்ற வீராங்கனை (2004-இல் மரியா ஷரபோவாவின் சாதனை முறியடிப்பு)

3. மிக இளம் வயதில் கிராண்ட்ஸ்லாம் வென்ற பிரிட்டன் வீராங்கனை

4. ஒரு செட் கூட விட்டுக் கொடுக்காமல், அமெரிக்க ஒப்பன் டென்னிஸ் தொடரை வென்ற இளம் வயது வீராங்கனை (2014-இல் செரீனா வில்லியம்ஸின் சாதனை முறியடிப்பு)…

என ஒரு வெற்றி மூலம் பல சாதனைகளுக்கு சொந்தக்காரியாகியுள்ளார் எம்மா ரடுகானு.

பிரிட்டனின் ராணி எலிசபெத், எம்மா ரடுகானுவின் வெற்றிக்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றி மூலம், உலக அளவில் மகளிர் வீராங்கனைகள் பட்டியலில் 23 ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறார். பிரிட்டனின் நம்பர் 1 வீராங்கனையாகியுள்ளார் எம்மா ரடுகானு.

தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் இருக்கும் வீராங்கனைகள் மல்லுக்கட்டும் போட்டியில், 150 ஆவது மற்றும் 73 ஆவது இடத்தில் இருந்த வீராங்கனைகள், மகளிர் அமெரிக்க ஓப்பன் தொடரில் மோதியதையே ஆச்சரியத்துடன் பார்த்த டென்னிஸ் உலகம், எம்மா ரடுகானு நேர் செட்களில் வென்றதை பார்த்து வியந்துகொண்டிருக்கிறது.

மறுபக்கம் சமூக வலைத்தளங்களில் எம்மாவின் வெற்றியை பல நாட்டவர்களும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.

 

 

Source: BBC


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்