Sinopharm குறித்த வைத்திய சங்கத்தின் கோரிக்கை 

Sinopharm தடுப்பூசியை பெற்றுக்கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது டோஸ் வழங்கப்படுமா? 

by Staff Writer 09-09-2021 | 2:46 PM
Colombo (News 1st) Sinopharm தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் (Dose) பெற்ற 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு மூன்றாவது டோஸாக வேறு தடுப்பூசி வகையை வழங்குமாறு இலங்கை வைத்திய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அதற்காக அஸ்ட்ராசெனெக்கா, பைசர் அல்லது மொடேர்னா ஆகிய தடுப்பூசிகளை பயன்படுத்துமாறு இலங்கை வைத்திய சங்கம் பரிந்துரை செய்துள்ளது. அஸ்ட்ராசெனெக்கா, பைசர் மற்றும் மொடேர்னா தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டோருடன் ஒப்பிடுகையில், Sinopharm தடுப்பூசியை பெற்றுக்கொண்ட 50 வயதுக்கு மேற்பட்டவர்களின் மரணம் மற்றும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் விகிதம் ஆகியன அதிகமாக காணப்படுவதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பரிசோதனைகளிலும் அஸ்ட்ராசெனெக்கா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருப்பதாகவும் Sinopharm தடுப்பூசியை பெற்றுக்கொண்ட 7 வீதமானோருக்கு அந்த நிலை​மை இல்லை என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த பரிசோதனையை அடிப்படையாக கொண்டு 18 முதல் 60 வயதுக்கிடைப்பட்ட தீவிர நோய் அல்லாதவர்களுக்கு Sinopharm தடுப்பூசியை வழங்குமாறு இலங்கை வைத்திய சங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது. 12 முதல் 18 வயதுக்கிடைப்பட்ட நோய் நிலைமையுடன் உள்ளவர்களுக்கு பைசர் தடுப்பூசியை வழங்குமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஸ்புட்னிக் தடுப்பூசியின் முதலாவது டோஸ் வழங்கியவர்களுக்கு இரண்டாவது டோஸ் வழங்க முடியவில்லை எனின், அதற்காக அஸ்ட்ராசெனெக்கா, பைசர் அல்லது மொடேர்னா தடுப்பூசிகளை வழங்குமாறும் இலங்கை வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது.