தாய்லாந்து பிரதமரை இலங்கைக்கு வருமாறு அழைப்பு

தாய்லாந்து பிரதமரை நாட்டிற்கு வருமாறு இலங்கை தூதுவர் அழைப்பு

by Staff Writer 08-09-2021 | 5:26 PM
Colombo (News 1st) கொவிட் தொற்று நிலைமை குறைவடைந்த பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு தாய்லாந்துக்கான இலங்கைத் தூதுவர் Chaminda I. Colonne, அந்நாட்டு பிரதமர் பிரயூத் சான் ஓச்சாவுக்கு (Prayut Chan-o-cha) அழைப்பு விடுத்துள்ளார். தலைநகர் பெங்கோக்கில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் தாய்லாந்து பிரதமரை சந்தித்த போது அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். தாய்லாந்து - இலங்கை இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பிலான கலந்துரையாடலை துரிதப்படுத்துவதற்கான அவசியம் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன், கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு மற்றும் இலங்கை முதலீட்டு சபையுடன் Online ஊடாக சந்திப்பொன்றை நடத்துமாறும் பிரதமரால் தாய்லாந்து முதலீட்டு சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை ஒழிப்பதற்கும் விவசாயம், மீன்பிடி தொழிற்துறை மற்றும் செயற்கை மழையை பொழியச் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை வழங்கவும் தாய்லாந்து பிரதமர் இதன்போது இணக்கம் தெரிவித்துள்ளார். நாட்டில் 'தாய்' மொழியை கற்பிப்பதற்கான மத்திய நிலையம் மற்றும் தாய்லாந்தில் சிங்கள மொழியை கற்பிப்பதற்கான மத்திய நிலையத்தை திறப்பது தொடர்பில் தூதுவர் முன்வைத்த யோசனைக்கு தாய்லாந்து பிரதமர் தமது விருப்பத்தை தெரிவித்துள்ளார். ஐந்தாவது பிம்ஸ்டெக் மாநாட்டிற்கு தலைமைத்துவம் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ள தாய்லாந்திற்கு இலங்கை தமது அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்குமென தாய்லாந்துக்கான இலங்கைத் தூதுவர் சமிந்தா ஐ கொலொன்னே கூறியுள்ளார்.