by Staff Writer 08-09-2021 | 10:26 PM
Colombo (News 1st) கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தேசிய வனவிலங்குகள் திணைக்களத்தின் பொறுப்பில் வழக்குப் பொருளாக தடுத்துவைக்கப்பட்டுள்ள 13 யானைகளை அவற்றின் ஆரம்பகால உரிமையாளர்களிடம் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (08) உத்தரவிட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவு சட்டமா அதிபரின் ஆலோசனை மற்றும் வனவிலங்குகள் அமைச்சர் விடுத்த வர்த்தமானி அறிவித்தலை கருத்தில் கொண்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட பின்னர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் பெரும் எண்ணிக்கையிலான யானைகள் கடந்த அரசின் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டதுடன் வனவிலங்குகள் திணைக்களம், பொலிஸார், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் உள்ளிட்ட விசாரணை நிறுவனங்கள் சில வழக்குகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தன.
நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைக்கும் வரை இந்த யானைகள் வழக்கு பொருட்களாக தேசிய வனவிலங்குகள் திணைக்களத்தின் பொறுப்பிலுள்ள பின்னவல மற்றும் உடவலவ யானைகள் காப்பகத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தன.
அவற்றில் 13 யானைகளை விடுவிக்குமாறு நீதிமன்றத்தில் விடயங்களை சமர்ப்பித்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவு முதலாம் இலக்க பொறுப்பதிகாரி கோரினார்.
சட்டமா அதிபரின் ஆலோசனை மற்றும் வனவிலங்குகள் அமைச்சர் ஓகஸ்ட் 19 ஆம் திகதி வௌியிட்ட வர்த்தமானியை அடிப்படையாகக் கொண்டே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வர்த்தமானியின் ஊடாக யானைகளைப் பதிவுசெய்யும் பணிகளை உரியவாறு முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் 3 மாதங்களுக்குள் பதிவுசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் இதன்போது நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்வைக்கப்பட்ட விடயங்களுக்கு அமைவாக வழக்குப் பொருட்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 13 யானைகளை அவற்றை வைத்திருந்தவர்களிடம் கையளிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் எஸ். பிரபாகரன் உத்தரவிட்டார்.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக சுமார் 6 வருடங்களாக உடவலவ யானைகள் காப்பகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 03 மூன்று யானைகள் ஆரம்பகால உரிமையாளர்களிடம் இன்று கையளிக்கப்பட்டன.
பின்னவல யானைகள் காப்பகத்தில் 2015 ஆம் ஆண்டு முதல் தடுத்துவைக்கப்பட்டிருந்த 4 யானைகள் ஆரம்பகால உரிமையாளர்களிடம் நேற்று (07) மாலை கையளிக்கப்பட்டதுடன் அந்தப் பணிகள் இரவு 11 வரையும் நீடித்ததாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் கூறினார்.