புதிய இடைக்கால அரசாங்கத்தை அமைத்த தலிபான் அமைப்பு

ஆப்கானில் புதிய இடைக்கால அரசாங்கத்தை அமைத்தது தலிபான் அமைப்பு

by Staff Writer 08-09-2021 | 9:49 AM
Colombo (News 1st) ஆப்கானிஸ்தான் இனிமேல் "ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய இராச்சியம்'' என்றே அழைக்கப்படுமென தலிபான்கள் அறிவித்துள்ளனர். அத்துடன், தலிபான்களால் நேற்றைய தினம் (07) இடைக்கால அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஆப்கானிஸ்தானின் இடைக்கால பிரதமராக முல்லா மொஹம்மட் ஹஸ்ஸன் அகூந்த் (Mullah Mohammad Hassan Akhund) என்பவரை தலிபான் தலைமை அறிவித்துள்ளது. ஹஸ்ஸன் அகூந்த், ஐக்கிய நாடுகள் சபையின் கறுப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ளராவார்.

ஆப்கானிஸ்தானின் புதிய இடைக்கால பிரதமர் Mullah Mohammad Hassan Akhund

இந்த நிலையில், பொதுவௌிக்கு பெரிதாக தோன்றாத இடைக்கால பிரதமர் அகுந்த்ஸதா வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய விதிகள் மற்றும் ஷரியா சட்டத்தை அரசு பேணுமென தெரிவித்துள்ளார். தேசத்தின் உயரிய நலன்களை பாதுகாத்து, அமைதி, வளம், வளர்ச்சி தழைத்தோங்க பொறுப்பில் உள்ளவர்கள் பணியாற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். ஷரியா சட்டத்திற்கு உட்பட்டு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான மதம் மற்றும் நவீன அறிவியல் சூழ்நிலைகள் நாட்டு மக்கள் அனைவருக்கும் வழங்கப்படுவது உறுதிப்படுத்தப்படும் என ஆப்கானிஸ்தானின் இடைக்கால பிரதமர் அறிவித்துள்ளார். இதேவேளை, முறைப்படி புதிய அரசு அமையும் வரை இடைக்கால அரசில் இடம்பெறுவோரை தலிபான் தலைமை அறிவித்துள்ளதாக அந்த அமைப்பின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதற்கமைய, துணைப் பிரதமராக முல்லா அப்துல் கனீ பரதா, உள்துறை அமைச்சராக சராஜுதின் ஹக்கானி, பாதுகாப்பு அமைச்சராக முல்லா யாகூப் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தலிபான் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். இதில் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சராஜுதின் ஹக்கானி, தலிபான் போராளிகள் ஆயுதக்குழுவில் கடுமையான பயிற்சி பெற்ற ஹக்கானி குழுவை நிறுவியவரின் மகன் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. புதிய அமைச்சரவையில் இதுவரை பெண்கள் எவருக்கும் இடமளிக்கப்படவில்லை என பரவலாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தானில் பொருளாதார மற்றும் சமூக ரீதியில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள பின்புலத்தில் ஆயுதமேந்திய தலிபான்கள் ஆட்சியமைத்துள்ளனர். கடந்த மாதம் 15 ஆம் திகதி, தலிபான்களால் தலைநகர் காபூலில் தமது அதிகாரம் நிலைநாட்டப்பட்டது. எவ்வாறாயினும், சுதந்திரமாக வாழ்வதற்குரிய உரிமையை பெற்றுத் தருமாறு கோரி ஆப்கான் மக்களால் தலிபான்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.