தேசிய கபடி குழாத்தில் கிழக்கு மாகாண வீரர்கள்

by Staff Writer 07-09-2021 | 7:51 PM
Colombo (News 1st) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 7 வீர, வீராங்கனைகள் தேசிய கபடி குழாத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். 19 ஆவது ஆசிய விளையாட்டு விழா சீனாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேசிய கபடி அணிக்கான முன்னோடி குழாம் தெரிவு விளையாட்டுத்துறை அமைச்சில் அண்மையில் நடைபெற்றது. இதில் அம்பாறை - நிந்தவூர் பிரதேசத்தை சேர்ந்த மூவர் தேசிய கபடி குழாத்தில் இடம்பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ள கிழக்கு மாகாண வீரர்களாவர். நிந்தவூர் அல் மதீனா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களான இவர்கள், தேசிய மற்றும் தெற்காசிய மட்ட கபடி போட்டிகளில் இலங்கை சார்பாக ஏற்கனவே விளையாடி திறமையை நிரூபித்தவர்கள். எம்.ரி. அஸ்லம் சஜா, ஏ.எம்.எம். ஹாலீஸ் மற்றும் ஏ.ஏ. அப்லல் ஆகிய வீரர்களே அந்த சிறப்பை பெற்றுள்ளனர். சர்வதேச மட்டத்தில் கபடி விளையாட்டின் மூலம் சாதிக்கத் துடிக்கும் இந்த இளம் வீரர்கள் உரிய முறையில் ஊக்குவிக்கப்பட வேண்டியதே காலத்தின் தேவையாகும். இதேவேளை, தேசிய கபடி குழாத்துக்கு வட மாகாணத்திலிருந்து மூன்று வீராங்கனைகள் தெரிவாகியுள்ளனர்.