சுனில் பெரேரா மறைவிற்கு பிரதமர் இரங்கல்

சுனில் பெரேரா மறைவிற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இரங்கல்

by Staff Writer 06-09-2021 | 4:31 PM
Colombo (News 1st) பிரபல பாடகர் சுனில் பெரேராவின் மறைவிற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இரங்கல் தெரிவித்துள்ளார். ஐந்து தசாப்த காலங்களாக இலங்கை மக்களின் இதயங்களை வென்ற ஜிப்சீஸ் இசைக்குழுவின் தலைவர் சுனில் பெரேராவின் மறைவு செய்தியை அறிந்து தான் மிகுந்த வருத்தமடைந்ததாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். சுனில் பெரேராவின் தலைமையில் 1968 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஜிப்சீஸ் இசைக்குழு 1970-களில் சிறந்த முன்னேற்றத்தை கண்டிருந்தது. இலங்கையில் குழு இசையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு சுனில் பெரேரா உள்ளிட்ட ஜிப்சீஸ் குழுவினர் மேற்கொண்ட செயற்பாடு அளப்பரியது என பிரதமர் தமது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். 'லிந்த லங்க சங்கமய', 'அம்மா அம்மா' போன்ற ஜிப்சீஸ் குழுவினரின் முதலாவது சொந்த படைப்புகள் மிகக் குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமடைந்தன. நாட்டின் முதலாவது இடைவிடா இசைத்தொகுப்பு அடங்கிய ஒலிப்பேழையை 1981ஆம் ஆண்டு தயாரித்த சுனில் பெரேரா உள்ளிட்ட ஜிப்சீஸ் குழுவினர், 1987ஆம் ஆண்டு 'லுணுதெஹி' என்ற பெயரில் நான்கு பாடல்களை உள்ளடக்கிய ஒலிப்பேழையை அறிமுகப்படுத்தினர். 'ஜய மங்களம் வேவா!', 'அம்மா அம்மா', 'குருமிட்டோ', 'லுணுதெஹி', 'அபி தென்னா', 'ஓயே ஒஜாயே', 'பிட்டி கொடபன் நோனே', 'அங்கிள் ஜொன்சன்', 'லதா நோ கதா', 'லொவே செம எகம தெயே' மற்றும் அண்மையில் பாடிய 'கொத்தமல்லி' பாடல் ஆகியன சுனில் பெரேரா உள்ளிட்ட ஜிப்சீஸ் குழுவினரின் புகழை உச்சத்திற்கு கொண்டு சென்றது. அரசியல் சித்தாந்தம் எதுவாக இருப்பினும், சுனில் பெரேரா ஒரு பாடகராகவும், இசைத்துறையில் சிரேஷ்ட கலைஞராகவும் இலங்கை மக்களின் இதயங்களில் என்றென்றும் நிலைத்திருப்பார் என்பது தமது நம்பிக்கை என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். சுனில் பெரேரா அவர்களின் மறைவால் துயருறும் அவரது குடும்பத்தினர் மற்றும் இரசிகர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.