75 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் ஐக்கிய தேசியக் கட்சி

75 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் ஐக்கிய தேசியக் கட்சி

எழுத்தாளர் Staff Writer

05 Sep, 2021 | 9:09 pm

Colombo (News 1st) சுதந்திரத்தின் பின்னர் அதிகக் காலம் நாட்டை ஆட்சி செய்த முக்கிய அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இன்று 75 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருப்பதாவது,

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய திட்டம் தொடர்பில் பேசுவதற்கு இதுவே சிறந்த சந்தர்ப்பம். வரலாற்றில் அரசாங்கங்கள் மாறுகின்றபோது, கொள்கைகளும் மாற்றமடைகின்றமையால், நாடென்ற வகையில் பின்னடைவு ஏற்படுகின்றது. ஜப்பான், சீனா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளை போன்று நாமும் நீண்ட கால கொள்கையுடன் செயற்பட்டிருந்தால், இன்று எமது நாடு வளர்ச்சியடைந்த நாடாக மாறியிருக்கும். ஆகவே, நீண்ட கால கொள்கைகளை பேணி, நாட்டை முன்னேற்றுவதற்கான யோசனைகளை நாம் முன்வைக்கின்றோம். இரும்பை விட வலிமையான கொள்கைகள், அரசாங்கம் மாறுகின்றபோது மாற்றமடையாத வகையில் சட்ட ரீதியான பிணைப்புடன் காணப்பட வேண்டும். நாட்டிற்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்துவதாயின், நால்வகை பாதுகாப்பை நாம் பிரேரிக்கின்றோம். சுகாதார பாதுகாப்பு முதலில் முக்கியமானது. இரண்டாவது, பொருளாதார பாதுகாப்பு மூன்றாவது அறிவு பாதுகாப்பு , நான்காவது, சுற்றாடல் பாதுகாப்பு . எமது வேலைத்திட்டம் இரண்டு பகுதிகளைக் கொண்டது. ஒன்று, நீண்ட கால வேலைத்திட்டத்தினூடாக சிரேஷ்ட இலங்கையை உருவாக்குதல். இரண்டாவது, குறுகிய கால வேலைத்திட்டத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு தேவையான நிவாரணத்தை வழங்குவதாகும். அனைவரும் ஒன்றிணைந்து வெற்றியை நோக்கி பயணிப்போம்

சுதந்திரத்தை எதிர்பார்த்து காத்திருந்த காலத்தில் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை மற்றும் இலங்கை மீதான பற்று அதிகம் தேவைப்பட்டது.

இதற்கு உந்துசக்தியாக 1946 செப்டம்பர் 6 ஆம் திகதியன்று அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது.

கட்சியை உருவாக்கும் பிரேரணையை அரச சபை உறுப்பினர் எஸ். நடேசன் முன்வைத்ததுடன், அதனை அரச சபை உறுப்பினர் டி.பி. ஜாயா வழிமொழிந்தார்.

மஹாமான்ய டி.எஸ். சேனாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கட்சி, 1948 இல் பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து விடுபடுவதற்கான போராட்டத்தில் முன்னின்று செயற்பட்டது.

சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமரான டி.எஸ்.சேனாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தே உருவாக்கப்பட்டார்.

அவர் விவசாய குடியேற்றங்களை விஸ்தரித்து நாட்டின் விவசாயத்துறைக்கு வலுவூட்டினார்.

1977 ஆம் ஆண்டு, இந்நாட்டில் திறந்த பொருளாதார கொள்கையை அறிமுகப்படுத்தியதும் ஐக்கிய தேசியக் கட்சியாகும்.

இலவச பாடசாலை புத்தகங்கள், ஆடை உற்பத்தி தொழிற்சாலைகள், முதலீட்டு வலயங்கள் உள்ளிட்ட பாரிய அபிவிருத்தி திட்டங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி நாட்டிற்கு கொண்டுவந்தது.

இளைஞர்களை இலக்காகக் கொண்டு, அவர்களின் திறமைகளை மேம்படுத்தும் நோக்கில், இளைஞர் நகரம், இளைஞர் சேவை மன்றம் போன்ற திட்டங்களையும் நிறுவனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி அறிமுகப்படுத்தியது.

நாட்டின் அபிவிருத்தித் திட்டத்தின் திருப்புமுனையாக அமைந்த, மகாவலி திட்டமும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் காலகட்டத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது.

டி.எஸ். சேனாநாயக்க, டட்லி சேனாநாயக்க, சேர் ஜோன் கொத்தலாவல, ஜே.ஆர். ஜயவர்த்தன, ரணசிங்க பிரேமதாச, டி.பி. விஜேதுங்க மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கடந்த 75 ஆண்டுகளாக ஐக்கிய தேசியக் கட்சியை வழிநடத்தியுள்ளனர்.

கட்சியும் நாடும் தீர்மானமிக்க தருணத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில், புதிய நோக்கு தேவையாகவுள்ள ஒரு சந்தர்ப்பத்திலேயே ஐக்கிய தேசியக் கட்சி தனது 75 ஆவது ஆண்டு பூர்த்தியை கொண்டாடுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்