தலிபான்கள் 600 பேர் கொல்லப்பட்டனர்

பஞ்ஷிர் மாகாணத்தில் மோதல்: தலிபான்கள் 600 பேர் கொல்லப்பட்டனர்

by Bella Dalima 05-09-2021 | 4:42 PM
Colombo (News 1st) ஆப்கானிஸ்தானின் பஞ்ஷிர் (Panjshir) மாகாணத்தில் 600-க்கும் அதிகமான தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக எதிர்தரப்பு படைகளை மேற்கோள்காட்டி ரஷ்ய ஊடகமொன்று செய்தி வௌியிட்டுள்ளது. ஆயிரத்திற்கும் அதிகமான தலிபான் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதாக அல்லது தாமாக சரணடைந்ததாக எதிர்தரப்பு படைகளின் பேச்சாளர் Fahim Dashti தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் ஏனைய மாகாணங்களிலிருந்து பொருட்களை பெற்றுக்கொள்வதில் தலிபான்களுக்கு பிரச்சினை இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, குறித்த பிரதேசத்தில் அதிகளவான மிதிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளதால், தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கைகளை குறித்த படைகள் மந்தமாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. பஞ்ஷிர் மாகாணத்தில் மோதல்கள் தொடர்ந்து வருவதாக தலிபான் தரப்பை ​சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் உள்ள 34 மாகாணங்களில் 33 மாகாணங்களை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். ஆனால் பஞ்ஷிர் மாகாணத்தில் தேசிய கிளர்ச்சி குழுவினர் மட்டும் தலிபான்களுக்கு அடிபணியாமல் சண்டையிட்டு வருகிறார்கள். இதற்கிடையே அந்த மாகாணத்தை கைப்பற்றி விட்டதாக தலிபான்கள் அறிவித்தனர். ஆனால் அதை எதிர்ப்பு படையினர் திட்டவட்டமாக மறுத்தனர். தாங்கள் தொடர்ந்து சண்டையிட்டு வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.