சட்டவிரோதமான முறையில் பொருட்களை களஞ்சியப்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை

by Bella Dalima 05-09-2021 | 5:14 PM
Colombo (News 1st) சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்து பொதுமக்களுக்கு நிவாரண விலையில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர்கள் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு அத்தியாவசிய சேவைகளுக்கான ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் செனரத் நிவுன்ஹெல்ல பணிப்புரை விடுத்துள்ளார். பொலிஸ்மா அதிபர், அனைத்து மாவட்ட அரசாங்க அதிபர்கள், நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் மற்றும் உணவு ஆணையாளருக்கு கடிதம் மூலம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மறைத்து வைத்தல், அதிக விலைக்கு விற்பனை செய்தல் மற்றும் பொதுமக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்குதல் உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்கும் நோக்கில் ஜனாதிபதி, பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 5 ஆம் சரத்திற்கமைய, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கிணங்க, அரசின் நிவாரண விலைக்கு அல்லது சுங்கத்தில் இறக்குமதி செய்யப்பட்ட விலையைக் குறிப்பிட்டு சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள உணவுப் பொருட்களை பொதுமக்களுக்கு நியாயமான விலையில் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அத்தியாவசிய சேவைகளுக்கான ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் செனரத் நிவுன்ஹெல்ல பணிப்புரை விடுத்துள்ளார்.