59 இலங்கையர்கள் தமிழகத்தில் கைது

சட்டவிரோதமாக கனடா செல்ல முயன்ற 59 இலங்கையர்கள் தமிழகத்தில் கைது; புலனாய்வு அமைப்பினர் விசாரணை

by Staff Writer 05-09-2021 | 6:50 PM
Colombo (News 1st) தமிழகம் வழியாக கனடா செல்ல முயன்ற இலங்கையர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் தொடர்பாக இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பினர் இராமநாதபுரத்தில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக கடந்த ஜூன் மாதம் 11 ஆம் திகதி தூத்துக்குடிக்கு சென்ற 27 பேர் மதுரையில் கைது செய்யப்பட்டனர். கனடா செல்வதற்கு திட்டமிட்டிருந்த இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு, கனடா தப்பிச்செல்லும் நோக்கில் மங்களூருவில் பதுங்கியிருந்த இலங்கையர்கள் 32 பேர் அதே நாள் மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே மரைக்காயர்பட்டணத்தை சேர்ந்த சிலர் அடைக்கலம் கொடுத்திருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பிற்கு அண்மையில் மாற்றப்பட்டதை அடுத்து, அதிகாரிகள் குழுவொன்று மண்டபம் அருகே வேதாளை, சீனியப்பா தர்ஹா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளை பார்வையிட்டுள்ளனர். இலங்கை தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக சந்தேகிக்கப்பட்ட ஒருவரை கைது செய்து அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.