by Bella Dalima 05-09-2021 | 11:11 AM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய மேலும் இரண்டு பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
திருகோணமலை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் சடலங்களை அடக்கம் செய்யக்கூடிய காணிகள் தொடர்பில் அறியக்கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
எனினும், அந்த காணிகளை பயன்படுத்துவதற்கான இறுதி அனுமதி இதுவரை கிடைக்கவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு பொருத்தமான காணிகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பிரதேச செயலாளர்கள், சுகாதார அதிகாரிகள் அனைவருக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளினால் வழங்கப்படும் தகவல்களுக்கு அமைய, பொருத்தமான காணிகள் தெரிவு செய்யப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களில் இரண்டாயிரத்து 522 பேரின் சடலங்கள் மட்டக்களப்பு - ஓட்டமாவடி பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
ஓட்டமாவடி மயானத்தில் மேலும் 300 சடலங்களை புதைப்பதற்கான காணி மாத்திரமே காணப்படுவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.