சுதேச சிகிச்சை முறைகளை சர்வதேசத்திற்கு அறிமுகப்படுத்துவது காலத்தின் தேவை: பிரதமர் தெரிவிப்பு

by Bella Dalima 04-09-2021 | 6:06 PM
Colombo (News 1st) உலகளாவிய ரீதியில் பிரபல்யமடைந்து வரும் சுதேச மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தின் உச்சபட்ச பலனை பெற்றுக்கொள்வதற்கு தற்போதிருந்தே தயாராக வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஆராய்ச்சி முடிவுகளை உலகிற்கு முன்வைத்து, சுதேச வைத்தியம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தின் தரத்தை நிர்ணயிக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மொனராகலை - சிறிகலவில் அமைக்கப்பட்டுள்ள ராஜபுர ஆயுர்வேத வைத்தியசாலையை திறந்து வைக்கும் நிகழ்வில், அலரி மாளிகையில் இருந்து நிகழ்நிலையில் கலந்துகொண்ட போதே பிரதமர் இதனை கூறியுள்ளார். முன்னோர்கள் பாதுகாத்த சுதேச சிகிச்சை முறைகளை அவ்வாறே எதிர்கால தலைமுறையினருக்கு பாதுகாத்து கையளிப்பது போன்றே, அதனை சர்வதேசத்திற்கும் அறிமுகப்படுத்துவது காலத்தின் தேவை என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அதன் பொருட்டு சுதேச வைத்தியம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் தேர்ச்சி பெற்ற நாட்டின் சுதேச வைத்தியர்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் என்ற ரீதியில் பாராட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார். நடுக்குவாதம், பக்கவாதம் போன்ற நரம்பியல் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சுதேச வைத்திய மத்திய நிலையமொன்றை நாட்டில் உருவாக்க ஏற்கனவே திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.