by Bella Dalima 04-09-2021 | 6:37 PM
Colombo (News 1st) இலங்கை மக்களின் உணவில் முக்கிய அங்கமாக உள்ள கோதுமை மாவின் விலை 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், எவ்வித அனுமதியையும் பெறாமலேயே இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் தொடர்பிலான ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 12 ரூபாவால் அதிகரிப்பதாக பிரிமா நிறுவனம் நேற்று (03) அறிவித்தது.
நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றத்தை தடுப்பதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில், இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டொலரின் பெறுமதிக்கு நிகராக தமது உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால், கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கு அனுமதிக்குமாறு கோதுமை இறக்குமதி நிறுவனங்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் கடந்த ஜுலை மாதம் வேண்டுகோள் விடுத்திருந்தன.
எனினும், கோதுமை மா விலையை அதிகரிப்பதற்கு எவவித அனுமதியும் வழங்கப்படவில்லை என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்தது.
இந்நிலையில், கோதுமை மா விலையை 12 ரூபாவால் அதிகரிப்பதற்கு இறக்குமதி நிறுவனம் எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் ஆராய்வதாக அத்தியாவசிய சேவைகள் தொடர்பிலான ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் செனரத் நிவுன்ஹெல்ல தெரிவித்தார்.
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அன்றாட உணவிலும் கோதுமை மா முக்கிய பங்கு வகிக்கின்றது.
இந்த நிலையில், திடீர் விலையேற்றம் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள தமக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் என மலையக மக்கள் தெரிவித்தனர்.
உழைப்பிற்கேற்ற ஊதியத்தை கூட பெற முடியாத நிலையில், பெருந்தொற்று காலத்தில், வாழ்க்கையை நகர்த்தும் தமக்கு மானிய அடிப்படையிலேனும் கோதுமை மாவை பெற்றுத் தர வேண்டும் என்பதே மலையக மக்களின் கோரிக்கையாகவுள்ளது.
இந்நிலையில், கோதுமை மா விலையேற்றம் பேக்கரி உற்பத்திகள் மன்றும் சிற்றுண்டி வகைகளின் விலைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
விலை அதிகரிப்பிற்கு மத்தியில் பழைய விலைக்கே உணவு வகைகளை விற்பனை செய்ய முடியாதுள்ளதாக உணவகங்களை நடத்திச் செல்வோர் தெரிவித்தனர்.
பெருந்தொற்றினால் மக்கள் அவதியுறும் தருணத்தில் பொருட்களின் விலையேற்றத்தாலும் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்காக அரசாங்கம் அண்மைக்காலமாக பாராட்டுக்குரிய பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
கோதுமை மாவின் விலையேற்றம் தொடர்பிலும் தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நுகர்வோரின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.