by Bella Dalima 04-09-2021 | 11:23 AM
Colombo (News 1st) சந்தையில் நிலவும் சீனி மற்றும் அரிசி தட்டுப்பாட்டினை அடுத்த இரண்டு நாட்களுக்குள் நிவர்த்திப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் தொடர்பிலான ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் செனரத் நிவுன்ஹெல்ல தெரிவித்துள்ளார்.
சில தரப்பினர் அநாவசியமான முறையில் பொருட்களை பதுக்கி வைப்பதால், சந்தையில் சீனி மற்றும் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள சீனி மற்றும் அரிசியை துரிதமாக நாடளாவிய ரீதியில் பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.
இதனிடையே, சீனி மற்றும் அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், அந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படவில்லையென நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதேவேளை, கோதுமை மாவின் விலையை 12 ரூபாவால் அதிகரிப்பதற்கு நிறுவனங்கள் எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் ஆராய்வதாக அத்தியாவசிய சேவைகள் தொடர்பிலான ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் செனரத் நிவுன்ஹெல்ல தெரிவித்துள்ளார்.