by Bella Dalima 04-09-2021 | 11:08 AM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் சிறுவர்கள் மத்தியில் மிக வேகமாக பரவி வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை 180 சிறுவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், அவர்களில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் டாக்டர் சமந்த ஆனந்த தெரிவித்தார்.
இதனிடையே, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 4,50,000-ஐ கடந்துள்ளது.
நேற்று 3,644 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 4,51,401 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, நாட்டில் மேலும் 202 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த மரணங்கள் அனைத்தும் நேற்று முன்தினம் (02) இடம்பெற்றுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கிணங்க, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,806 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 113 பேர் ஆண்கள் என்பதுடன், 89 பேர் பெண்களாவர்.
அத்துடன், 60 வயதிற்கு மேற்பட்ட 155 பேர் COVID தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, COVID-19 தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,80,166 ஆக அதிகரித்துள்ளது.