LTTE அமைப்பு மீதான தடையை நீடித்தது பிரித்தானியா

LTTE அமைப்பு மீதான தடையை நீடித்தது பிரித்தானியா

by Bella Dalima 03-09-2021 | 1:11 PM
Colombo (News 1st) 2000 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க பிரித்தானிய பயங்கரவாத சட்டத்தின் கீழ், LTTE அமைப்பிற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீடிப்பதற்கு பிரித்தானியா தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானம் தொடர்பில் பிரித்தானிய உள்துறை செயலாளரால் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக, இலங்கையின் வௌிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் தமக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு LTTE அமைப்பினால் விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, பிரித்தானியாவின் தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான மேன்முறையீட்டு ஆணைக்குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு அமைய ஐரோப்பிய வலயம் உள்ளிட்ட 30-க்கும் அதிக நாடுகளிலும் பிரித்தானியாவிலும் LTTE அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பாகவே கருதப்படும். பயங்கரவாதத்திற்கு எதிரான பூகோள போராட்டத்தில் பிரித்தானியாவிற்கும் ஏனைய நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பை இலங்கை அரசாங்கம் பாராட்டியுள்ளது. அத்துடன், பிரஜைகளின் உயிர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பயங்கரவாதம் மற்றும் வன்முறை கடும்போக்குவாதத்தை குறைப்பதற்கு, பிரித்தானியாவுடன் இணைந்து செயற்படுவதாகவும் வௌிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.