நீதிக்கான வேள்வியில் தனது எழுத்துக்களை ஆகுதியாக்கிய ஞானப்பிரகாசம் பிரகாஷ்

by Bella Dalima 03-09-2021 | 4:59 PM
Colombo (News 1st) மரணம் அனைவருக்கும் பொதுவானது. எனினும், ஒரு சிலரின் மரணம் வெறும் துயரமாக மாத்திரம் அன்றி படிப்பினையாகவும் அமைந்து விடுகிறது. வாழ்க்கை சவாலை பலரும் வியக்கும் வண்ணம் வெற்றிகொள்ள எத்தனித்திருந்த 26 வயது ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஷின் மறைவும் அத்தகையதே! 1995 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் திகதி யாழ். கொடிகாமம் - வௌ்ளாம்பொக்கட்டியில் பிறந்த ஞானப்பிரகாசம் பிரகாஷ், அல்லாரை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை பயின்றார். 9 வயதில் கால்கள் வலுவிழக்க சக்கர நாற்காலியில் இவரது உடல் முடங்கினாலும், துணிவு வானுயர நின்றது. உடல் நலம் ஒத்துழைக்காத நிலையில், தரம் 5-இல் பாடசாலை கல்வியை கைவிட்டு பிரகாஷ் சமூக வலைத்தளத்தில் ஒரு ஜனநாயக போராளியாக தம்மை சிறுகச் சிறுக செதுக்கத் தொடங்கினார். உரிமைக்காக போராடிய மலையக மக்களுக்காகவும் நீதி கோரி நிற்கும் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்காகவும் சமூக வலைத்தளங்கள் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டங்களில் ஆர்வத்துடன் பங்கேற்ற பிரகாஷ், குரலற்ற மக்களுக்காக நீதிக்கான வேள்வியில் தனது எழுத்துக்களை ஆகுதியாக்கினார். எழுத்தறிவை விஞ்சிய பட்டறிவால் குறுகிய காலத்திற்குள் செய்தி அறிக்கையிடலில் நிபுணத்துவம் பெற்ற ஞானப்பிரகாசம் பிரகாஷூக்கு சமூக ஊடகங்களில் மாத்திரமன்றி, பல முன்னணி பத்திரிகைகளில் இருந்தும் செய்தி வலைத்தளங்களில் இருந்தும் சந்தர்ப்பங்கள் தேடிச்சென்றன. நோய்த் தாக்கத்தினால் தனது உடல் ஓய்ந்தபோதிலும், மன உறுதியுடன் கூடிய எழுத்தாற்றலினால் எம்மிடையே கம்பீரமாய் வலம் வந்த பிரகாஷையும் COVID தொற்று விட்டுவைக்கவில்லை. சாவகச்சேரி வைத்தியசாலையில் உயிர் பிரிந்த ஊடகவியலாளர் பிரகாஷின் உடல் இறுதிக் கிரியைகளுக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. தனது உடலை தானமாக ஏற்குமாறு பிரகாஷ் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்திடம் கடந்த வருடம் விண்ணப்பம் செய்திருந்தார். எனினும், COVID தொற்று அவரது நோக்கத்திற்கு தடை ஏற்படுத்தியுள்ளது. உடலின் வலுவிழப்பை துச்சமென எண்ணி, இரட்டிப்பு உள வலுவுடன் ஊடகத்துறையில் குரலற்றவர்களுக்காய் குரல் கொடுத்த ஊடக நண்பர் ஞானப்பிரகாசம் பிரகாஷின் ஆத்மா சாந்தியடையட்டும்!