இலங்கையில் பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டு 155 ஆண்டுகள் பூர்த்தி

by Staff Writer 03-09-2021 | 1:29 PM
Colombo (News 1st) மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நேரம், காலம் பாராது சேவையாற்றும் பொலிஸார், பொதுமக்களின் சீருடை தரித்த நண்பர்கள் என்றால் அது மிகையாகாது. இலங்கையில் பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 155 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. 1795 ஆம் ஆண்டு கொழும்பு துறைமுகத்திலுள்ள குதங்களின் பாதுகாப்பிற்காக பொலிஸ் சேவையை ஒத்த நடைமுறையினை பிரித்தானியர்கள் அறிமுகம் செய்தனர். எவ்வாறாயினும், 1866 ஆம் ஆண்டு உத்தியோகபூர்வ பொலிஸ் சேவை இலங்கையில் ஆரம்பமானது. இலங்கையின் முதலாவது பொலிஸ்மா அதிபராக G.W.R.கெம்பல் நியமிக்கப்பட்டார். சர் ரிச்சட் அளுவிஹாரே பொலிஸ்மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதலாவது இலங்கையராவார். 1947 ஆம் ஆண்டு அவருக்கான நியமனம் வழங்கப்பட்டிருந்தது. இலங்கையில் மூன்று தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டு போரின் போது மக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்த அயராது பாடுபட்ட பொலிஸார் சுனாமி போன்ற பேரிடர்களின் போது மக்களின் துயர்போக்க தலைமையேற்று செயற்பட்டனர். COVID தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் தொற்று நிலைமை காரணமாக வழமைபோன்று பொலிஸ் தினத்தை முன்னிட்டு வைபவங்கள் நடத்தப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்தூவ குறிப்பிட்டார்.