ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 70 ஆவது வருடப் பூர்த்தி

by Bella Dalima 02-09-2021 | 1:21 PM
Colombo (News 1st) ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 70 ஆவது வருடப் பூர்த்தி இன்றாகும். 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் திகதி S.W.R.D. பண்டாரநாயக்கவின் தலைமையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது. மகா சங்கத்தினர், வைத்தியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என்ற ஐந்து பிரிவினரை அடிப்படையாகக் கொண்டு இந்த கட்சி உருவாக்கப்பட்டது. 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணியை வெற்றியை நோக்கி வழிநடத்திய S.W.R.D. பண்டாரநாயக்க பிரதமரானார். அவரது ஆட்சிக்காலத்தில் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்த இலங்கையின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மக்கள்மயமாக்கப்பட்டதுடன், சிங்கள மொழி அரச மொழியாக அறிவிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை இடதுசாரி கட்சிகள் மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கூட்டணி 30 வருடங்களுக்கு மேலாக நாட்டின் ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளதுடன், தற்போதைய ஆளும் கட்சியான ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளிக் கட்சியாகவும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி திகழ்கின்றது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நடைமுறைக்கு வந்ததன் பின்னர் இரண்டு ஜனாதிபதிகளை ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உருவாக்கியதுடன், குறித்த இரண்டு ஜனாதிபதிகளும் 21 வருடங்களாக நாட்டை ஆட்சி செய்தனர். இலங்கையை குடியரசாக மாற்றிய பெருமையும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கத்திற்கேயுரியது. உலகின் முதலாவது பெண் பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயக்கவும் 41 வருடங்களாக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு தலைமை தாங்கினார். கொரோனா தொற்று நிலைமை காரணமாக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 70 ஆவது ஆண்டு பூர்த்தி விழா இன்று காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக நடத்தப்படவுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளர் மஹிந்த அமரவீர கூறினார்.