தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்படுமா?

தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்படுமா: நாளை (03) தீர்மானம்

by Bella Dalima 02-09-2021 | 10:18 AM
Colombo (News 1st) தற்போது நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை தொடர்ந்தும் நீடிப்பதா, இல்லையா என்பது தொடர்பில் நாளை (03) தீர்மானிக்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. COVID-19 ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் நாளை கூடவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன குறிப்பிட்டார். இதன்போது, தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பதா, இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் கூறினார். இதேவேளை, தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கோரியுள்ளார். இது தமது தனிப்பட்ட கருத்து எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சமூகத்தில் கொரோனா தொற்று பரவுதல் மற்றும் நோயாளர்களின் அதிகரிப்பில் எவ்வித வீழ்ச்சியும் ஏற்படாமையால் ஊரடங்கை நீடிக்க வேண்டும் என தாம் கருதுவதாகவும் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கூறியுள்ளார். நாளாந்தம் சுமார் 5000 வரையில் நோயாளர்கள் அறிக்கையிடப்பட்டாலும், சுமார் 50,000 நோயாளர்கள் சமூகத்தில் இருக்கக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார். இதனால், குறைந்தபட்சம் மேலும் இரண்டு வாரங்களுக்கு பயணக்கட்டுப்பாடுகளை விதிக்கும் பட்சத்தில், கொரோனா தொற்று பரவுவதை ஓரளவுக்கு குறைத்துக்கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனைய செய்திகள்