ஜல்லிக்கட்டில் சுதேச இன மாடுகளுக்கு மட்டும் அனுமதி

ஜல்லிக்கட்டு போட்டிகளில் சுதேச இன மாடுகள் மாத்திரம் பங்கேற்கலாம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

by Bella Dalima 02-09-2021 | 6:40 PM
Colombo (News 1st) ஜல்லிக்கட்டு போட்டிகளில் சுதேச இன மாடுகள் மாத்திரம் பங்கேற்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டு கலப்பின மாடுகளை இதற்காக பயன்படுத்தக்கூடாது எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ஊர்மாடு, வடமாடு, எருது விடுதல் போன்ற போட்டிகளில் சுதேச இன மாடுகளை மாத்திரமே பயன்படுத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு முன்பாக அதில் பங்கேற்பவை சுதேச இன மாடுகளா என்பதை கால்நடை மருத்துவர்கள் உறுதி செய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, கிராமங்களில் வளர்க்கப்படும் சுதேச இன மாடுகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருவதாக இரண்டு நீதிபதிகள் அடங்கிய குழாம் கவலை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்போருக்கும் விவசாயிகளுக்கும் மானியம், ஊக்கத்தொகை வழங்கி சுதேச இன மாடுகளை வளர்ப்பதற்கு அரசாங்கம் ஊக்கமளிக்க வேண்டுமெனவும் நீதிபதிகள் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.