அம்பாறை அரிசி ஆலைகள், நெல் களஞ்சியசாலைகளில் திடீர் சோதனை

by Staff Writer 31-08-2021 | 3:26 PM
Colombo (News 1st) அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினரால் அரிசி ஆலைகள், மற்றும் நெல் களஞ்சியசாலைகளில் திடீர் சோதனை நடவடிக்கையொன்று நேற்று (30)  முன்னெடுக்கப்பட்டது. அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று மற்றும்ஒலுவில் ஆகிய பிரதேசங்களில் உள்ள அரிசி ஆலைகள் மற்றும் நெல் களஞ்சியசாலைகளிலேயே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. நுகர்வோருக்கு நிபந்தனை விதித்தல், மேலதிக கட்டணங்கள் அறவிடல் மற்றும் பொருட்களைப் பதுக்கிவைத்தல் போன்ற முறைப்பாடுகள் பொது மக்களினால் கிடைக்கப்பெற்றதை அடுத்து இந்த சோதனை நடவடிக்ககை முன்னெடுக்கப்பட்டது. அட்டாளைச்சேனை பகுதியில் பாவனைக்குதவாத ஒரு தொகுதி நெல் மூடைகள் மற்றும் உரம் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த களஞ்சியசாலை ஒன்றிற்கு சீல் வைக்கப்பட்டது. சுற்றிவளைப்புகளின் போது சுமார் 20,000 மூடை நெல் கைப்பற்றப்பட்டதுடன் 15 உர மூடைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் மாவட்ட பொறுப்பதிகாரி சாலின்ட பண்டார நவரத்ன தலைமையிலான குழுவில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. வியாபார நிலையங்களுக்கு எச்சரிக்கை அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டதுடன், மேலும் ஒரு சில வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் மாவட்ட பொறுப்பதிகாரி சாலின்ட பண்டார நவரத்ன தெரிவித்தார்.