அத்தியாவசிய உணவு பொருள் விநியோகம்; வர்த்தமானி

அத்தியாவசிய உணவுப் பொருள் விநியோகத்திற்கான அவசர சட்ட விதிமுறைகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி வௌியீடு

by Staff Writer 31-08-2021 | 10:09 AM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் அமுலாகும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்திற்கான அவசர சட்ட விதிமுறைகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வௌியிடப்பட்டுள்ளது. நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இந்த அதிவிசேட வர்த்தமானி  வௌியிடப்பட்டுள்ளது. இதனிடையே, நேற்றிரவு ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்ட அறிக்கையில், நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை பதுக்கி வைத்தல், அதிக விலைக்கு விற்பனை செய்தல் ஆகியவற்றை தவிர்க்கும் நோக்கில் இந்த அவசர சட்ட விதிமுறைகள் அறிவிக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, நெல், அரிசி, சீனி உள்ளிட்ட பிற நுகர்வுப் பொருட்களுக்கான இணைப்பு செயற்பாடுகளுக்கான அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் M.D.S.P. நிவுன்ஹெல்ல நியமிக்கப்பட்டுள்ளார். நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை அரச உத்தரவாத விலையில் அல்லது இறக்குமதி விலையில் சுங்கவரி அடிப்படையில் பொதுமக்களுக்கு வழங்க அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியை நியமிப்பதும் அவசர சட்ட விதிமுறைகளில் அடங்குவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனூடாக அரச வங்கிகள் மூலம் மொத்த கொள்வனவிற்காக வழங்கப்பட்டுள்ள கடனை, கடன் பெற்றுக்கொண்டவர்களிடம் இருந்து அறவிட முடியும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.