by Staff Writer 29-08-2021 | 8:59 PM
Colombo (News 1st) காலஞ்சென்ற சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவின் இறுதிக் கிரியைகள் இன்று (29) நடைபெற்றன.
சிரேஷ்ட சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமான கௌரி சங்கரி தவராசா திடீர் உடல்நல குறைவினால் கடந்த திங்கட்கிழமை காலமானார்.
அன்னாரின் பூதவுடல் இன்று (29) காலை பொரளை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட ஒருசிலர் மாத்திரம் இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்டிருந்தனர்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி K.V. தவராசாவின் மனைவியான கெளரி சங்கரி தவராசா நாட்டில் இடம்பெற்ற பல முக்கியமான வழக்குகளில் ஆஜராகியிருந்தார்.
சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர், யுவதிகள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நீண்ட காலமாக சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா செயற்பட்டு வந்தார்.
ஆட்கடத்தல், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் அரசியல் படுகொலைகளுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வாதாடி உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் பேசப்பட்ட ஒரு பிரபல சட்டத்தரணியாக கௌரி சங்கரி தவராசா திகழ்ந்தார்.
சோதனை மிகுந்த வேளைகளில் எவ்வித அச்சமும் இன்றி மிகுந்த துணிவுடன் போராடிய ஒப்பற்ற திறமைசாலியாக சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா திகழ்ந்ததாக சுவிட்சர்லாந்து தூதரகம் வௌியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக அவர் ஆற்றிய இலவச சேவை அவரது பாரபட்சமற்ற சேவையின் விசேட அம்சமாக இருந்தாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவின் மறைவு சட்டத்துறைக்கும் நாட்டிற்கும் பேரிழப்பாகும் என சுவிட்சர்லாந்து தூதரகம் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.