மறைந்தாலும் வாழும் பிரின்சன்

மூளைச்சாவடைந்தவரின் சிறுநீரகங்களைக் கொண்டு இருவருக்கு வாழ்வளித்த யாழ். வைத்தியர்கள்

by Bella Dalima 27-08-2021 | 8:07 PM
Colombo (News 1st) மூளைச் சாவடைந்த ஒருவரின் அவையவங்களைக் கொண்டு நோயுற்றவர்களுக்கு வாழ்வளித்த மகத்தான கைங்கரியத்தை யாழ். வைத்தியர்கள் வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளனர். இது தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று (26) மாலை நடைபெற்றது. விபத்தில் உயிரிழந்த 28 வயதான இளைஞரின் பெற்றாரின் முழுமையான சம்மதத்துடன் இந்த மகத்தான சேவையை செய்ய முடிந்ததாக சிறுநீரக வைத்திய நிபுணர் ஆர். தங்கராஜா தெரிவித்தார். இக்கட்டான தருணத்திலும் பிறருக்கு நன்மையளிக்கும் சேவையை செய்த அந்த பெற்றோருக்கு மருத்துவ உலகமும் நோயாளிகளும் கடமைப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். உயிரிழந்த இளைஞர் பிரின்சனின் சிறுநீரகங்களை இளம் சிறுநீரக நோயாளிகள் இருவருக்கு வெற்றிகரமாக பொருத்தி, அவர்களுக்கு புதுவாழ்வளிக்க முடிந்ததாக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் ஆர். பவானந்தராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வரலாற்றில் முதற்தடவையாக இவ்வாறான வெற்றிகரமான சத்திரசிகிச்சை நடைபெற்றிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். தமது பணி நேரத்திற்கும் மேலதிகமான நேரத்தை இந்த சத்திரசிகிச்சைக்காக செலவிட்டதாக மயக்க மருந்து விசேட நிபுணர் வைத்தியர் ஜானகி அருண்மொழி கூறினார். சத்திரசிகிச்சை நிபுணர்களான பிரசாத் சுப்பிரமணியம், சிவலிங்கம் மதிவாணன், சிறுநீரக வைத்திய நிபுணர் பிரம்ம ஆர்.தங்கராஜா, மயக்க மருந்து விசேட நிபுணர் ஜானகி அருண்மொழி, வைத்தியர் வேதநாயகம் பவந்தன் மற்றும் சத்திரசிகிச்சை நிபுணர் வீ.துஸ்யந்தன் ஆகியோர் கொண்ட மருத்துவக் குழு இந்த சாதனையை புரிந்துள்ளது. யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியை சேர்ந்த 29 வயதான தங்கராசா பிரின்சன் கடந்த 16 ஆம் திகதி இவ்வுலகைவிட்டுப் பிரிந்தார். மூன்று ஆண் பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் பிரின்சன் மூத்தவர். கூலித்தொழிலாளியான பிரின்சன் வாகன விபத்தொன்றை எதிர்நோக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூளைச்சாவடைந்ததாக உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டது. மகன் உயிர் பிழைக்க மாட்டார் என்பதை வைத்தியர்கள் மூலம் அறிந்துகொண்ட பெற்றோர், தமது மகனின் சிறுநீரகங்களை வேறு இருவருக்கு வழங்க சம்மதித்தனர். இதனையடுத்து, அறுவை சிகிச்சை மூலம் பிரின்சனின் சிறுநீரகங்கள் வேறு இரு இளைஞர்களுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. ''மூளைச்சாவு நடந்ததால் மகன் தப்ப மாட்டார் என சொன்னார்கள். முதலில் நான் இதற்கு மறுப்புத் தெரிவித்தேன். பின்னர் சிந்தித்து உணர்ந்து சம்மதித்தோம்,'' என பிரின்சனின் தந்தை ஆரியக்குட்டி தங்கராஜா தெரிவித்தார். தமது மகன் இறந்தாலும், இன்னொருவர் மூலம் வாழ்வதால் மகிழ்ச்சியடைவதாக பிரின்சனின் தாயார் தங்கராஜா கமலேஷ்வரி தெரிவித்தார். ஆம்! தங்கராசா பிரின்சன் இவ்வுலகை விட்டுப் பிரிந்தாலும், வேறு இருவரின் உருவில் இன்னும் எம்மத்தியில் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார். பிரின்சனின் பெற்றோரின் பெருந்தன்மை என்றென்றும் போற்றுதலுக்குரியதே.