இலங்கை அகதிகளுக்காக 317 கோடி நிதி ஒதுக்கீடு

இலங்கை அகதிகளுக்காக 317 கோடி ரூபா ஒதுக்கீடு: தமிழக முதல்வர் அறிவிப்பு 

by Bella Dalima 27-08-2021 | 6:13 PM
Colombo (News 1st) இந்தியாவின் தமிழகத்திலுள்ள இலங்கை தமிழ் அகதிகள் நலனுக்கான சிறப்புத் திட்டங்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். இலங்கை தமிழ் அகதிகளின் வாழ்வாதாரத்திற்காக இந்த அறிவிப்புகளை அவர் சட்டப்பேரவையில் வௌியிட்டுள்ளார். இலங்கை தமிழர்கள் வசிக்கும் முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள 7469 வீடுகள், 239 கோடியே 54 இலட்சம் ரூபா செலவில் புதிதாகக் கட்டித்தரப்படும் எனவும் 3510 புதிய வீடுகளை கட்டுவதற்கு நடப்பு நிதி ஆண்டில் 108 கோடியே 81 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 30 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதைத் தவிர, ஆண்டுதோறும் இது போன்ற வசதிகளை செய்து கொடுக்க ஏதுவாக, இலங்கை தமிழர் வாழ்க்கைத்தர மேம்பாட்டு நிதியாக 5 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அவர் அறிவித்துள்ளார். முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பளித்து, அவர்களது வாழ்வாதாரத்தை மேப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்க 10 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் மாதாந்தம் அவர்களுக்கு வழங்கப்படும் பணக்கொடை அதிகரிக்கப்படும் எனவும் தமிழக முதல்வர் மேலும் தெரிவித்துள்ளார். அதன்படி, மாதந்தோறும் குடும்பத் தலைவருக்கு 1500 ரூபாவும் ஏனையோருக்கு 1000 ரூபாவும் 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 500 ரூபாவும் வழங்கப்படவுள்ளது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் விலையில்லா எரிவாயு இணைப்பும் இலவச அடுப்பும் வழங்கப்படவுள்ளதுடன், குடும்பத்திற்கு ஐந்து எரிவாயு உருளைக்கு தலா 400 ரூபா வீதம் மானியத்தொகையும் வழங்கப்படவுள்ளது. முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு தற்போது 20 கிலோவிற்கு மேல் வழங்கப்படும் அரிசிக்கு கிலோ ஒன்றுக்கு 57 பைசா வீதம் மானியம் வழங்கப்படுகின்றது. இதனை இனி இரத்து செய்து, அவர்கள் பெறும் முழு அரிசி அளவும் இலவசமாக வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். குடியுரிமை வழங்குதல், இலங்கை திரும்ப விரும்பும் அகதிகளுக்கு தகுந்த ஏற்பாடுகள் செய்தல் போன்ற நீண்ட கால தீர்வினைக் கண்டறிய ஏதுவாக ஓர் ஆலோசனைக்குழு நிச்சயமாக விரைவில் அமைக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். தமிழ்நாட்டிலுள்ள முகாம்வாழ் இலங்கை தமிழர் நலன் பேணிட தமிழக அரசு மொத்தம் 317 கோடியே 40 இலட்சம் இந்திய ரூபா நிதி ஒதுக்கீடு செய்திடும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இதனிடையே, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்புகளுக்கு பல்வேறு தரப்பினரும் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் மண்டபம் முகாமில் வாழ்ந்து வரும் இலங்கை தமிழர்கள் முதலமைச்சரின் நலத்திட்டங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சட்டமன்ற கட்சித் தலைவர்களும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். முதன்முறையாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் இலங்கை அகதிகளுக்கு முதலமைச்சர் ஒருவர் இவ்வாறான திட்டங்களை அறிவித்துள்ளதாக, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டையும் வழங்கி ஆக்கபூர்வமான செயற்திட்டத்தையும் நடைமுறைப்படுத்தியுள்ளமைக்கு மக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாகவும் செல்வம் அடைக்கலநாதன் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.  

(பண பெறுமதி இந்திய ரூபாவில் குறிப்பிடப்பட்டுள்ளது)