விலையேற்றத்தை தடுக்க எடுத்துள்ள நடவடிக்கை என்ன?

பொருட்களின் விலையேற்றத்தை தடுக்க முன்னெடுத்துள்ள நடவடிக்கை என்ன: சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கேள்வி

by Staff Writer 26-08-2021 | 7:17 PM
Colombo (News 1st) பொருட்களின் விலையேற்றத்தை தடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்னவென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு கிலோகிராம் சீனியின் விலை சுமார் 50 ரூபாவால் அதிகரித்துள்ளது. சந்தையில் வழமைக்கு மாறாக பால் மாவுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதுடன், எரிபொருள், சமையல் எரிவாயு, மருந்துப்பொருட்கள், பாண் உள்ளிட்ட அநேகமான பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் போதுமானளவு மருந்துப்பொருட்கள் இருப்பதாக கூறிய அமைச்சர்கள், தற்போது தூதுவர்களிடம் மருந்துப்பொருட்களை கோரியுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறான நிலைமையில், ஔடதங்கள் பட்டியல், கேள்வி மனு, முன்பதிவு தொடர்பிலான தகவல்கள் அடங்கிய தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தரவுக்களஞ்சியத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த தகவல்கள் அழிந்ததை, பாரதூரமான விடயமாகக் கருதி பக்கசார்பற்ற விசாரணையை நடத்துமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரியுள்ளார்.