பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரிசி மூடைகள் கண்டுபிடிப்பு; சுமார் 20 களஞ்சியசாலைகளுக்கு சீல் வைப்பு

by Bella Dalima 26-08-2021 | 8:38 PM
Colombo (News 1st) அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவதற்கு எதிரான சட்டம் கடுமையாக்கப்பட்டதை அடுத்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை அரிசியை நுகர்வோர் விவகார அதிகார சபை கண்டுபிடித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஷாந்த திசாநாயக்க தலைமையிலான குழுவினால் நேற்று (25) சுற்றிவளைப்பு நடத்தப்பட்டது. இதன்போது, பொலன்னறுவை மாவட்டத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் சட்டவிரோதமாக நடத்திச்செல்லப்பட்ட நெல் களஞ்சியசாலைகள் சீல் வைக்கப்பட்டன. அநுராதபுரம் மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சட்டவிரோதமாக நடத்திச்செல்லப்பட்ட சுமார் 20 களஞ்சியசாலைகள் இன்று சுற்றிவளைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன. சவளக்கடை பகுதியிலுள்ள பாரிய நெல் களஞ்சியசாலையொன்றும் இதில் அடங்குகின்றது. பியர் உற்பத்திக்காக சுமார் 30 இலட்சம் கிலோகிராம் நெல் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்தமை, நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட சுற்றிவளைப்புக் குழுவினர் முன்னெடுத்த நடவடிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இடைத்தரப்பு நெல் களஞ்சியசாலைகளை சீல் வைக்கும் தீர்மானத்தினால், களஞ்சியசாலை உரிமையாளர்கள் சிலர் தம்மிடமிருந்த முழுமையான நெல் தொகையை அரசாங்கத்தின் நிர்ணய விலைக்கு, விற்பனை சபைக்கு வழங்குவதற்கு தாமாகவே முன்வந்துள்ளதாக, நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.