சீனி விலையை அதிகரித்து நுகர்வோரை சூறையாடுவது யார்?

by Bella Dalima 26-08-2021 | 8:54 PM
Colombo (News 1st) சந்தையில் ஒரு கிலோகிராம் சீனியின் சில்லறை விலை 200 ரூபாவிற்கும் மேல் அதிகரித்துள்ளது. இலங்கை மக்கள் வருடாந்தம் சுமார் 500 மெட்ரிக் தொன் சீனியை உட்கொள்கின்றனர். இந்த தேவையை ஈடு செய்யும் வகையில், நாட்டிற்குள் 100 மெட்ரிக் தொன் சிவப்பு சீனி மாத்திரமே உற்பத்தி செய்யப்படுவதுடன், எஞ்சிய தொகை வௌிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. அரசாங்கம் கூறுகின்ற வகையில், சீனி இறக்குமதி தொடர்பிலான ஏகபோக உரிமம் 12 நிறுவனங்களிடம் உள்ளது. நிலைமை இவ்வாறிருக்க, சீனிக்கான இறக்குமதி வரி 50 ரூபாவில் இருந்து 25 சதமாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் 13 ஆம் திகதி குறைக்கப்பட்டது. இந்த தீர்மானம் காரணமாக சில தரப்பினர் அதிக இலாபத்தை பெற்றுக்கொண்டனர். அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து சீனி நீக்கப்பட்டதன் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவித்தது. 25 சத வரியின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட சீனி போதியளவு நாட்டில் உள்ளதாக புபுது ஜயகொட தெரிவித்தார். இந்நிலையில், நடைமுறையில் உள்ள சட்டத்தின் பிரகாரம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்பதால், 18 வருடங்களின் பின்னர் அதற்கான சட்டத்தை திருத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக கூட்டுறவு சேவைகள், நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண குறிப்பிட்டார்.

ஏனைய செய்திகள்