by Bella Dalima 25-08-2021 | 10:37 AM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளான 4,446 பேர் நேற்று (24) அடையாளம் காணப்பட்டனர்.
அதற்கமைய, நாட்டில் இதுவரை 3,98,801 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளானவர்களில் 2,386 பேர் நேற்று குணமடைந்தனர்.
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 3,46,767 பேர் குணமடைந்துள்ளனர்.
இதேவேளை, 190 கொரோனா மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இவர்களில் 113 ஆண்களும் 77 பெண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
30 வயதிற்கும் குறைந்த இருவரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இதன் பிரகாரம், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,750
ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 9,606 பேர் வீடுகளில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றனர்.
கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 3,162 பேர் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
வீடுகளில் சிகிச்சை பெறும் கொரோனா தொற்றாளர்கள், நோய் அறிகுறிகள் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் டொக்டர் ரஞ்சித் படுவன்துடாவ தெரிவித்தார்.
வீடுகளில் சிகிச்சை பெறும் கொரோனா தொற்றாளர்கள் காய்ச்சல் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என அவர் கூறினார்.
38.3 பாகை செல்சியஸிற்கும் அதிகமாக உடல் வெப்பநிலை காணப்படுமாயின், உடனடியாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும் என டொக்டர் ரஞ்சித் படுவன்துடாவ குறிப்பிட்டார்.
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் பலவீனமடைந்தவர்கள் அல்லது உடல் சோர்வடைந்தவர்கள் மாத்திரமே வைத்தியசாலைகளில் உடனடியாக அனுமதிக்கப்படுவர் என அவர் கூறினார்.
வீடுகளில் சிகிச்சை பெறுவோர் தங்களின் உடல் சோர்வடைகின்றதா என்பது தொடர்பில் இடைக்கிடையே சுய பரிசோதனை மேற்கொள்ளல் வேண்டும்.
அதற்காக, 30 செக்கன்ட்களில் கதிரையில் 8 தடவைகள் அமர்ந்து எழும்பும் பரிசோதனையை மேற்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறு செய்த பின்னர் 90 செக்கன்ட்கள் களைப்பை போக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எனினும், குறித்த 90 செக்கன்ட்களின் பின்னரும் களைப்பை போக்க முடியாத நிலை அல்லது மூச்செடுப்பதில் சிக்கல் காணப்படுமாயின், உடனடியாக வைத்தியசாலைகளுக்கு செல்ல வேண்டும் என டொக்டர் ரஞ்சித் படுவன்துடாவ தெரிவித்தார்.
இதேவேளை, நாளாந்தம் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், வைத்தியசாலைகளில் ஒக்சிஜன் பாவனையும் அதிகரித்துள்ளதாக ஔடத உற்பத்தி, விநியோகம் மற்றும் கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சின் செயலாளர் டொக்டர் சமன் ரத்னாயக்க குறிப்பிட்டார்.
நேற்று (24) மாத்திரம் 121 தொன் ஒக்சிஜன் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதனால் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள ஒக்சிஜனும் நாட்டிலுள்ள கொரோனா நோயாளர்களுக்காக பயன்படுத்தப்படுவதாக சமன் ரத்னாயக்க தெரிவித்தார்.