ஆப்கானில் கனேடிய படைகள் நிலைநிறுத்தப்படும்

ஆப்கானில் கனேடிய படைகள் நிலைநிறுத்தப்படும்: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவிப்பு

by Bella Dalima 25-08-2021 | 11:56 AM
Colombo (News 1st) எதிர்வரும் 31 ஆம் திகதியின் பின்னர் ஆப்கானிஸ்தானில் தமது நாட்டுப் படைகள் நிலைநிறுத்தப்படும் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வௌியேறுவதற்கு வழங்கப்பட்ட கால எல்லை எதிர்வரும் 31 ஆம் திகதி முடிவடையும் நிலையில், கனேடிய பிரதமர் குறித்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார். ஆப்கான் மக்கள் நாட்டை விட்டு வௌியேற விரும்புவார்களாயின், அவர்களுக்கு அனுமதி வழங்குமாறு தலிபான்களை தாம் தொடர்ந்தும் வலியுறுத்துவதாகவும் ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஆப்கானிஸ்தானிலிருந்து சுமார் 626 பேரை இந்தியா அழைத்துச்சென்றுள்ளது. இதில் 228 இந்தியர்களும் அதிகளவிலான ஆப்கான் பிரஜைகளும் அடங்குவதாக இந்திய நகர வீடமைப்பு அமைச்சர் Hardeep Singh Puri தெரிவித்துள்ளார். காபூலிலிருந்து வௌியேற விரும்பிய ஆப்கான் பிரஜைகளே அழைத்துவரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவுவது தமது தார்மீகக் கடமை என G7 நாடுகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். பெல்ஜிய தலைநகர் புரூசெல்ஸில் நேற்று நடைபெற்ற G7 நாடுகளின் தலைவர்களுக்கிடையிலான இணையவழி கலந்துரையாடலில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.