யால சரணாலய பகுதியில் பதிவான நிலநடுக்கத்தால் பாதிப்பில்லை

யால சரணாலய பகுதியில் பதிவான நிலநடுக்கத்தால் பாதிப்பில்லை

எழுத்தாளர் Bella Dalima

25 Aug, 2021 | 1:50 pm

Colombo (News 1st) யால சரணாலய பகுதியில் நேற்றிரவு பதிவான சிறு நிலநடுக்கத்தினால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப்பணியகம் அறிவித்துள்ளது.

யால சரணாலயத்தை அண்டிய பகுதியில் 2.5 ரிக்டர் அளவில் நேற்றிரவு 9.15 மணிக்கு இந்த நிலநடுக்கம் பதிவானது.

லுனுகம்வெஹர, பெரலிஹெல, சீனிமுன்ன மற்றும் லுனுகம்வெஹர நீர்த்தேக்கத்தை அண்டிய கிராமங்கள், லுனுகம்வெஹர நகரம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்கள் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர்.

பாரிய சத்தத்துடன் சுமார் ஒரு நிமிடம் நில அதிர்வு ஏற்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நில அதிர்வு தொடர்பில் இன்று இடர் முகாமைத்துவ அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல தெரிவித்தார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் வங்காள விரிகுடாவை அண்மித்து நேற்று (24) பகல் 5.1 மெக்னிட்யூட் அளவில் நில அதிர்வு பதிவானது.

இந்த நில அதிர்வினால் இலங்கைக்கு பாதிப்பு இல்லை என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க கூறினார்.

இதேவேளை, இலங்கைக்கு தெற்கே இந்து சமுத்திரத்தில் 5 மெக்னிட்யூட் அளவில் கடந்த 16 ஆம் திகதி நில அதிர்வு பதிவானது.

இலங்கைக்கு தெற்கே சுமார் 1,200 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நில அதிர்வினால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்