முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்

எழுத்தாளர் Bella Dalima

24 Aug, 2021 | 11:55 am

Colombo (News 1st)  முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தனது 65 ஆவது வயதில் இன்று (24) காலை காலமானார்.

COVID தொற்றுக்குள்ளாகி கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார்.

இலங்கை அரசியலில் பல திருப்புமுனைகளுக்கு காரணமாக திகழ்ந்தவர் மங்கள சமரவீர.

அரசியல் பின்னணி கொண்ட மஹானாம சமரவீர, மற்றும் ஹேமா சமரவீர தம்பதியரின் புதல்வராக 1956 ஆம் ஆண்டு மங்கள சமரவீர பிறந்தார்.

அன்னாரின் தந்தையாரான மஹானாம சமரவீர, சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சிக்காலத்தில் உள்ளூராட்சி மன்றங்கள், வீடமைப்பு, தொலைத்தொடர்பு மற்றும் தபால் துறை அமைச்சராக பதவி வகித்திருந்தார்.

அன்னாரின் தாயாரும் மாத்தறை மாநகர சபையினூடாக மக்களுக்கு சேவையாற்றியுள்ளார்.

கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி கற்ற மங்கள சமரவீர, லண்டனிலுள்ள புனித மார்ட்டின் பல்கலைக்கழகத்தில் ஆடை வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் தொடர்பில் பட்டம் பெற்றார்.

அன்னார், இலங்கை தேசிய திட்டமிடல் மையத்தில் வடிவமைப்பு ஆலோசகராக சில காலம் சேவையாற்றியிருந்தார்.

களனி பல்கலைக்கழகத்தின் அழகியல் ஆய்வு நிறுவகத்தில் வெளிவாரி விரிவுரையாளராகவும் மங்கள சமரவீர பணியாற்றினார்.

மங்களவின் அரசியல் பயணம்

அரசியல் வாரிசான மங்கள சமரவீர, 1983 ஆம் ஆண்டு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட தலைமை அமைப்பாளராக தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.

பின்னர், கட்சியின் முன்னணி அரசியலில் ஈடுபடும் வாய்ப்பும் அவரை தேடி வந்தது.

மாத்தறை தேர்தல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, தேர்தலில் போட்டியிட்ட அவர், 1989 ஆம் ஆண்டு முதற்தடவையாக பாராளுமன்றத்திற்கு பிரவேசித்தார்.

1994 ஆம் ஆண்டு சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அமைச்சரவைக்கு தெரிவாகியதன் பின்னர், மங்கள சமரவீர தமது ஆற்றலை வௌிப்படுத்தும் வகையில் மக்கள் சேவையில் ஈடுபட்டார்.

நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை, தொலைத்தொடர்புகள் தபால் அமைச்சுகளை திறம்பட வழிநடத்திய மங்கள சமரவீர, அந்த அரசாங்கத்தின் பிரதி நிதி அமைச்சராகவும் பதவி வகித்தார்.

இந்த நாட்டில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த தொலைத்தொடர்புத்துறையில் பாரிய மாற்றத்திற்கு தலைமை தாங்கியவர் மங்கள சமரவீர ஆவார்.

மாத்தறை மாவட்டத்தில் வரலாறு காணாத அபிவிருத்தியை ஏற்படுத்தவும் அவரின் செயற்பாடுகள் வழிவகுத்தன.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பல பதவிகளை ஏற்றிருந்த அவர், கட்சியின் முன்னேற்றத்திற்காகவும் குறிப்பிடத்தக்க சேவையை ஆற்றியுள்ளார்.

2001 ஆம் ஆண்டு தேர்தலில் அடைந்த தோல்வியை அடுத்து எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக நியமிக்கப்பட்டதுடன், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளராகவும் செயற்பட்டுள்ளார்.

2004 ஆம் ஆண்டு சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சியில் துறைமுகங்கள் விமான சேவைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி மங்கள சமரவீரவிற்கு வழங்கப்பட்டது.

ஆழமாக நட்பு பாராட்டினாலும் தலைமைத்துவத்துடன் இணங்கி செயற்பட முடியாத சந்தர்ப்பங்களில், நேரடியாக எதிர்ப்பு தெரிவிக்கும் பண்பினை அவர் கொண்டிருந்தார்.

2006 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஸவை ஜனாதிபதியாக அரிய​ணையில் அமர்த்த பாடுபட்ட மங்கள சமரவீர, அந்த அரசாங்கத்தின் வௌிவிவகார அமைச்சராக பதவியேற்றிருந்த நிலையில், அனுர பண்டாரநாயக்க மற்றும் ஶ்ரீபதி சூரியாராச்சி ஆகியோருடன் எதிர்க்கட்சியில் அமர்ந்தார்.

அப்போதைய அரசியல் தலைமைகளுக்கு சவால் விடுக்கும் வகையில், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரிவாக புதிய பிரவாகத்தை ஆரம்பித்தார்.

பின்னர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து புதிய அரசியல் பயணத்தை மங்கள சமரவீர ஆரம்பித்தார்.

அன்று முதல் எதிர்க்கட்சியில் இருந்து அரசியலில் ஈடுபட்ட மங்கள சமரவீர, தாம் வெற்றிபெறச் செய்த மஹிந்த ராஜபக்ஸவை தோற்கடித்து மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி கதிரையில் அமர்த்த பாரிய பங்களிப்பு செய்தார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் வௌிவிவகார அமைச்சர் பதவி மங்கள சமரவீர வசமானது.

நாட்டின் அரசியல் மாற்றத்தை முன்கூட்டியே அறிந்த மங்கள சமரவீர, 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதி தாம் வகித்த நிதி அமைச்சர் பதவியை துறந்தார்.

அரசியல் பயணத்தில் நேரடி தீர்மானங்களை எடுப்பதில் மங்கள சமரவீர ஒருபோதும் பின்வாங்கியதில்லை.

2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடைபெறவிருந்த தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என ஜூன் மாதம் அவர் விடுத்த அறிவிப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

தமக்காக ஒதுக்கப்பட்டிருந்த விருப்பு இலக்கத்திற்கு வாக்களிக்க வேண்டாம் என அவர் வேண்டுகோளும் விடுத்திருந்தார்.

அரசியலில் அவர் எப்போதும் ஒரு பேசுபொருளாக இருந்தார்.

தமது கருத்துக்களை நேரடியாக தெரிவிக்கவும், ஏனைய கருத்துக்கள் தொடர்பில் பகிரங்கமாக விவாதிக்கவும் மங்கள சமரவீர தயங்கியதில்லை. அவர் லிபரல் கொள்கையை கொண்டிருந்தார்.

எதிர்த்தரப்பில் இருந்தவர்கள் கூட அவரின் கொள்கைகளுக்கு மதிப்பளித்தனர்.

நாளுக்கு நாள் மாற்றம் காணும் உலகில், அன்னாரும் காலத்திற்கு ஏற்ற மாற்றங்களுடன் தம்மை புதுப்பித்துக்கொண்ட அரசியல்வாதியாவார்.

புத்தாக்கத்திறன் அவரின் வாழ்க்கைப் பயணத்தை மெருகூட்டியது.

காலமாவதற்கு சில தினங்களுக்கு முன்னதாக தற்காலத்திற்கு ஏற்ற இளைஞர்களுக்கான அரசியலை ஆரம்பிக்க அவர் முன் நின்றார்.

பொரளையில் இறுதிக்கிரியைகள் நடைபெற்றன 

அவரின் இறுதிக்கிரியைகள் சுகாதார நடைமுறைகளுக்கமைய பொரளையில் இன்று மாலை நடைபெற்றன.

இதன்போது, ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

நாட்டு மக்களுக்கு விலைமதிப்பற்ற சேவையாற்றிய மங்கள சமரவீர: பல்வேறு தரப்பினரும் இரங்கல் 

காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவு தொடர்பில் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் அரசியலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு போராடி, நாட்டு மக்களுக்கு விலைமதிப்பற்ற சேவையாற்றிய மங்கள சமரவீரவின் மறைவுச்செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையடைந்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தம்முடன் நெருக்கமாக அரசியலில் ஈடுபட்ட மங்கள சமரவீர, தனிப்பட்ட ரீதியில் தமது அரசியல் நடவடிக்கைகளுக்கு குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை வழங்கிய, அரசியல் சகபாடி என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ​பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்.

அன்னாரின் மறைவால் வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு பிரதமர் அனுதாபம் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியலில் உருவாகிய, புரட்சிகர அரசியல் கதாபாத்திரமான முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவுச்செய்தி தமக்கும் எதிர்க்கட்சிக்கும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ​தெரிவித்துள்ளார்.

தாம் நம்புகின்ற அரசியல் கொள்கைக்காக எந்தவொரு தடை வந்தாலும் எதிர்நீச்சல் செய்த அரிய அரசியல்வாதியாக மங்கள சமரவீர எனும் நாமம் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கும் என அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இனவாதத்திற்கு எதிரான கொள்கையில் இருந்து செயற்பட்ட அன்னார், தேசிய நல்லிணக்கத்திற்காக எப்போதும் முன்நின்றதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறுப்புக்கள் மற்றும் சவால்களை தமக்கு கிடைத்த ஆசிர்வாதமாக கருதி செயற்பட்ட மங்கள சமரவீர, புதிய உலகுடன் இணைந்த நவீன எண்ணங்கள் நிறைந்த அரசியல்வாதியாக திகழ்ந்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் மங்கள சமரவீரவின் மறைவு தொடர்பில் இரங்கல் தெரிவித்துள்ளார்

மங்கள சமரவீரவிற்கு இலங்கை தொடர்பில் சிறந்த நோக்கம் இருந்ததாக அவர் விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகளுக்காக அச்சமின்றி செயற்பட்ட மங்கள சமரவீரவின் மறைவு நாட்டுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் பாரிய இழப்பாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தனது அரசியலுக்காக இனவாதம் அல்லது மதவாதத்தை பயன்படுத்தாத மங்கள சமரவீர, அரசியலில் ஈடுபட்ட சிறந்த மனிதர் என மக்கள் விடுதலை முன்னணி விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மங்கள சமரவீர சிறுபான்மை மக்களுக்காக முன் நின்று செயற்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

மங்கள சமரவீரவின் திடீர் மறைவு இலங்கை அரசியலில் ஈடுசெய்ய முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஸ ​தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவு தொடர்பாக இராஜதந்திர அதிகாரிகள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தேசப்பற்றாளராகவும், மனித நேயம் கொண்டவராகவும், சிறந்த தலைவராகவும் செயற்பட்டதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பீ. டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதற்கு மங்கள சமரவீர சிறப்பான பங்களிப்பை நல்கியதாக கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சரின் மறைவிற்கு இலங்கைக்கான நியூஸிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எபல்டனும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கு மங்கள சமரவீர ஆற்றிய சேவையை நன்றியுடன் நினைவுகூர்வதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

மங்கள சமரவீர தமது காலத்தில் இருந்த பண்பான சிறந்த அரசியல்வாதி என நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹைம் கூறியுள்ளார்.

மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட மங்கள சமரவீர இலங்கைக்கும் மாலைத்தீவுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கு பங்களிப்பு செய்ததாக மாலைத்தீவுகளின் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சொலி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, சமத்துவம், நீதி மற்றும் சுயமரியாதை என்பவற்றின் அடிப்படையில் அனைத்து இலங்கையர்களையும் இணைத்து நாட்டினை எதிர்கால சந்ததியினருக்காக வளர்ச்சியிலும் செழிப்பிலும் முன்கொண்டு செல்ல வேண்டும் என விரும்பியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தனது வாழ்க்கையிலும் அரசியல் வாழ்க்கையிலும் இந்த கொள்கைகளில் அவர் உறுதியாக இருந்ததாகவும் எந்த சந்தர்ப்பத்திலும் கொள்கைகளில் இருந்து அவர் பின்வாங்கவில்லை எனவும் இரா.சம்பந்தன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன, மத வேறுபாடின்றி அனைத்து இலங்கை மக்களும் உண்மையான கொள்கைகள் உள்ள ஒரு தலைவரை இழந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலஞ்சென்ற அமைச்சர் மங்கள சமரவீர கடைசி வரை இலங்கையை பல்லின, பன்மத, பன்மொழி நாடாகவே கருதியதாகவும் அந்த எண்ணம் நாட்டின் அதிகாரபூர்வ கொள்கையாக மாற வேண்டும் என விரும்பியதாகவும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அவரது ஆத்மா சாந்தியடைய, அனைவரும் இலங்கையர் – இந்த நாடு ஒரு பன்மைத்துவ நாடு என்ற கொள்கையை நிஜமாக்க உழைக்க வேண்டும் என மனோ கணேசன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்