ஹிஷாலினி மரணம்: வழக்கின் 5 ஆவது சந்தேகநபராக ரிஷாட் பதியுதீனை பெயரிட நீதிமன்றம் அனுமதி

by Staff Writer 23-08-2021 | 6:53 PM
Colombo (News 1st) டயகம சிறுமி ஹிஷாலினியை சித்திரவதைக்கு உட்படுத்தியமை தொடர்பான வழக்கின் 05 ஆவது சந்தேகநபராக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை பெயரிடுவதற்கு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் ரஜிந்திரா ஜயசூரிய முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, வழக்கின் 05 ஆவது சந்தேகநபராக ரிஷாட் பதியுதீனை பெயரிடுவதற்கு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அனுமதி கோரிய நிலையில், அதற்கு மேலதிக நீதவான் அனுமதி வழங்கியுள்ளார். அதற்கமைய, எதிர்வரும் 06 ஆம் திகதி ரிஷாட் பதியுதீனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதேவேளை, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட 04 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். சமையல் எரிவாயு மூலம் ஏற்பட்ட தீயினால் சிறுமியின் உடல் எரிந்ததாக ரிஷாட் பதியுதீனின் குடும்பத்தினர் ஏற்கனவே வாக்குமூலமளித்திருந்தனர். எனினும், சிறுமியின் உடலில் மண்ணெண்ணெய் மணம் வீசியதாக, சிறுமியை வைத்தியசாலைக்கு ஏற்றிச்சென்ற சுவசெரிய அம்பியூலன்ஸ் வண்டியில் கடமையாற்றிய இருவர், சிறுமிக்கு சிகிச்சை வழங்கிய வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சிலரிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மன்றுக்கு அறிவித்துள்ளார். இதேவேளை, மிக நீண்ட காலமாக சிறுமி பாலியல் ரீதியிலான துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை விசேட சட்ட மருத்துவ அதிகாரிகள் தலைமையிலான மூவரடங்கிய நிபுணர் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார்.