மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சுகாதார ஊழியர் கொரோனாவிற்கு பலி

by Staff Writer 23-08-2021 | 4:58 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சுகாதார ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வேகமாக பரவி வருகின்ற கொரோனா தொற்று ஏற்கனவே முன்கள பணியாளர்கள் பலரது உயிர்களை காவுகொண்டுள்ளது. இந்நிலையில், மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த நிலையில், COVID தொற்றுக்குள்ளான 31 வயதான சுமைதன் கோபிதா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த முதலாவது சுகாதார ஊழியர் இவர் ஆவார். மட்டக்களப்பு - கிரான்குளம் மத்தி பிரதேசத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாரான சுமைதன் கோபிதா கடந்த ஐந்தரை வருடங்களாக மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலையில் சிற்றூழியராக கடமையாற்றி வந்தார். தனது 7 வருடகால சேவையில் முதல் ஒன்றரை வருடங்கள் கொழும்பு மஹரகம வைத்தியசாலையில் அவர் கடமையாற்றியிருந்தார். கடினமான சூழ்நிலையில் உயிரையும் துச்சமாகக் கருதி நோயாளர்களுக்கான சேவைகளை வழங்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு தன்னுயிர் நீத்த கோபிதா, கிரான்குளம் பிரதேசத்தை மாத்திரமல்லாது மட்டக்களப்பு மாவட்டத்தையே இன்று சோகத்தில் ஆழ்த்தியுள்ளார்.