இந்திய உயர்ஸ்தானிகர் - G.L. பீரிஸ் இடையில் சந்திப்பு

by Staff Writer 23-08-2021 | 2:54 PM
Colombo (News 1st) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் வௌிவிவகார அமைச்சர் G.L. பீரிஸிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. COVID-19 தொற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு இந்தியாவிடமிருந்து கிடைக்கும் தொடர்ச்சியான ஒத்துழைப்புகளுக்கு அமைச்சர் G.L.பீரிஸ் நன்றி தெரிவித்ததாக வௌிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பலை பயன்படுத்தி இலங்கைக்கான ஒக்சிஜனை அனுப்பி வைத்தமைக்கும் இதன்போது அமைச்சர் தமது நன்றியை தெரிவித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு இறுதியாக கூடப்பட்ட இந்து - லங்கா ஒன்றிணைந்த ஆணைக்குழுவை மீண்டும் விரைவில் கூட்டுவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக வௌிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவினால் இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள மருந்து உற்பத்தி தொழிற்சாலை தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.