ஜெனிவாவிற்கு கடிதம் அனுப்புவது தொடர்பில் தமிழ் கட்சிகள் கலந்துரையாடல்

ஜெனிவாவிற்கு கடிதம் அனுப்புவது தொடர்பில் தமிழ் கட்சிகள் கலந்துரையாடல்

எழுத்தாளர் Staff Writer

23 Aug, 2021 | 8:53 pm

Colombo (News 1st) தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் சிலர் நேற்று (22) இணையவழியில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், அந்தக் கட்சியின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஶ்ரீகாந்தா ஆகியோர் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றியுள்ளனர்.

இந்த கலந்துரையாடல் சுமார் மூன்றரை மணி நேரம் நீடித்துள்ளது.

தமிழ் கட்சிகள் இணைந்து ஜெனிவாவிற்கு கடிதமொன்றை அனுப்புவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

முதற்கட்டமாக ஒருமித்த நிலைப்பாட்டில் இணக்கம் காண்பதற்கு இதன்போது நான்கு விடயங்கள் அடையாளப்படுத்தப்பட்டதாக, TELO எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான கோரிக்கை, அரசியல் கைதிகளின் விடுதலை, திட்டமிட்ட காணி அபகரிப்பை நிறுத்துதல் மற்றும் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசையும் இந்தியாவையும் கோருதல் ஆகிய விடயங்களே இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

13 ஆவது திருத்தச்சட்டத்தை தீர்வாக ஏற்க முடியாது என்ற போதிலும், அதனை நிறைவேற்ற அரசு முன் வருவதை நல்லிணக்க நடவடிக்கையாக கருத முடியும் என நேற்றைய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் தீர்வு தொடர்பாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது அவசியம் என்ற போதிலும் அது தமிழ் மக்களின் நலன்களுக்காக அமைய வேண்டும் எனவும் சர்வதேச அழுத்தங்களில் இருந்து அரசாங்கம் தப்பிக்க இடமளிக்கக் கூடாது என்பதில் உறுதியாக செயற்படவும் நேற்றைய கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டதாக சுரேந்திரன் குருசுவாமி மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்