சிறைச்சாலை வைத்தியரை ரிஷாட் அச்சுறுத்தினாரா? 

சிறைச்சாலை வைத்தியரை ரிஷாட் பதியுதீன் அச்சுறுத்தியமை தொடர்பில் விசாரணை

by Staff Writer 23-08-2021 | 11:13 AM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சிறைச்சாலைகள் வைத்தியர் ஒருவரை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சிறைச்சாலைகள் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். மெகசின் சிறைச்சாலையில் நோயாளர்களை பரிசோதிக்கும் அறைக்குள் வைத்து, கடமைகளுக்கு இடையூறு விளைவித்து, கீழ்தரமான வார்த்தைகளில் பேசி, உயிர் அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கடமைநேர வைத்தியரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடமும் பொரளை பொலிஸ் நிலையத்திலும் குறித்த வைத்தியர் முறைப்பாடு செய்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க குறிப்பிட்டார்.