சுகாதாரத்துறை வீரர்களுக்கு தேசத்தின் சிரம் தாழ்ந்த நன்றிகள்!

by Staff Writer 22-08-2021 | 10:34 AM
Colombo (News 1st) சுமார் 2 வருட காலமாக கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர்க்கு எதிராக போராடிவரும் சுகாதாரத்துறை வீரர்கள் சிலரை நாடு ஏற்கனவே இழந்துவிட்டது. எனினும், அவர்கள் தொடர்ந்தும் தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள். வைத்தியர் கயான் தந்தநாராயணவை தங்கமான வைத்தியர் என்று அன்போடு அழைப்பார்கள் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த முதலாவது வைத்தியர் இவராவார். எல்லைகளற்ற மனிதாபிமான பண்புகள் படைத்த இளகிய மனம் படைத்த வைத்தியர் கயான், உயிரிழக்கும் வரை ராகம வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றியதுடன், அதற்கு முன்பு அவர் அம்பாறை வைத்தியசாலையில் குறை மாத குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றினார். பல குழந்தைகளின் உயிர்களை காப்பாற்றிய அவர் தங்கமான வைத்தியர் என புகழ்பெற்றார். ராகம வைத்தியசாலையில் கடமையாற்றிவந்த வைத்தியர் கயான் தந்தநாராயண கொரோனா தொற்றுக்குள்ளாகி ஆரம்பத்தில் முல்லேரியா வைத்தியசாலையிலும் பின்னர் காலி - கராப்பிட்டிய வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்றார். 32 வயதுடைய அவர் கடந்த பெப்ரவரி மாதம் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். சுயநலமின்றி மனித உயிர்களை பாதுகாப்பதற்காக தமது குடும்பத்தைப் பிரிந்து இன்னொருவரின் உயிரை காப்பாற்ற போராடும் சுகாதாரத்துறை வீரர்களே, உங்களுக்கு தேசத்தின் சிரம் தாழ்ந்த நன்றிகள்...!